ஆளுநர்  புரோஹித் கார்மீது கறுப்புக்கொடிகளை வீசிய தி.மு.க-வினர்! அதிர்ந்த போலீஸ் | DMK holds protest against Governor's visit

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (02/01/2018)

கடைசி தொடர்பு:13:55 (02/01/2018)

ஆளுநர்  புரோஹித் கார்மீது கறுப்புக்கொடிகளை வீசிய தி.மு.க-வினர்! அதிர்ந்த போலீஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் தஞ்சை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கார் அருகே கறுப்புக்கொடிகளை தி.மு.க-வினர் வீசியதால், காவல்துறையினர் பதற்றமடைந்தார்கள்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று காலை தஞ்சாவூர் பெரிய கோயிலில் தரிசனம்செய்துவிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தைத் தாெடங்கிவைக்க, புதிய பேருந்து நிலையம் செல்லும்போது, தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், 500-க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆளுநர் இங்கு ஆய்வு மேற்கொள்வது, மாநில சுயாட்சிக்கு எதிரானது என முழக்கமிட்டார்கள். ஆளுநரின் கார் அருகே கறுப்புக்கொடிகளை எறிந்ததால், காவல்துறையினர் பதற்றமடைந்தார்கள்.

காவல்துறையினரின் பாதுகாப்புடன் புதிய பேருந்து நிலையம் சென்ற ஆளுநர் புரோஹித், 'தூய்மை பாரதம்' திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியதோடு, பிரதமர் மோடி ஸ்டைலில் சாலையில் இறங்கி துடைப்பதால் கூட்டி, சுத்தம்செய்து அசத்தினார்.  அங்கிருந்து புறப்பட்ட ஆளுநர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்துவிட்டு, ஓய்வெடுக்க சுற்றுலா மாளிகை சென்றார். இன்று மதியம், காவிரி உரிமை மீட்புக்குழுவினர், ஆளுநருக்கு கறுப்புக்கொடி போராட்டம் நடத்தயிருப்பதால், தஞ்சை புது ஆற்றுச்சாலை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகத்திடமிருந்து காவிரிநீரைப் பெற்றுத் தராத ஆளுநர், தமிழக மக்களிடம் மனு வாங்குவது நாடகம் என எதிர்ப்பு தெரிவித்து, காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.