வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/01/2018)

கடைசி தொடர்பு:16:30 (02/01/2018)

வறட்சிக்குப் பிறகு பசுமை! பொள்ளாச்சியில் மீண்டும் களைகட்டும் சினிமா சூட்டிங்

சினிமா வெளிப்புறப்  படப்பிடிப்புகளுக்கு புகழ்பெற்ற பொள்ளாச்சிப் பகுதி இப்போது தொடர்ந்து நடைபெறும் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புகளால் களைகட்டியுள்ளது. ஆரம்பகாலத்தில் பாகப்பிரிவினை, விடிவெள்ளி போன்ற கறுப்பு- வெள்ளை சினிமாக்கள் பொள்ளாச்சிப் பகுதியில் படமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து, நீண்ட ஆண்டுகளுக்குப்பிறகு ஸ்ரீதர் இயக்கிய ‘‘காதலிக்க நேரமில்லை‘‘ வண்ணத்திரைப்படத்தின் 80 சதவிகித காட்சிகள் ஆழியாறு அணை, குரங்கு அருவி, அட்டகட்டி பகுதிகளில் படமாக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப்பிறகு ரஜினிகாந்த் நடித்த `முரட்டுக்காளை' படத்தின் முழுப்படப்பிடிப்பும் ஜமீன் ஊத்துக்குளி, சேத்துமடை, டாப்ஸ்லிப் போன்ற எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டன. அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது அந்த வெற்றி சினிமா உலகில் ராசியாக பார்க்கப்பட்டது.

அதையடுத்து, சகலகலா வல்லவன், கரையெல்லாம் செண்பகப்பூ, தேவர்மகன், அமைதிப்படை, எஜமான், சூரியவம்சம், தோழர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்படங்களுடன் பல மலையாளப்படங்களின் படப்பிடிப்புக்களும் அங்கு நடந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் வறட்சியின் காரணமாக அருவிகள், ஆறுகள் வற்றிப்போயின. வயல்வெளிகளில் பசுமை மறைந்து போனது. இதன் காரணமாக சினிமாத் துறையினர் பொள்ளாச்சியை மறந்துவிட்டனர். கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளால் பொள்ளாச்சிப் பகுதியில் மீண்டும் பசுமை திரும்பியுள்ளது. இப்போது சில தமிழ்சினிமா படப்பிடிப்பு அங்கு நடந்துவருகிறது. அதைவிட டி.வி, சீரியல் படப்பிடிப்பு அதிகமாக நடந்துவருகிறது. இது பொள்ளாச்சிப் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.