மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி... நண்பரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய ‘வழிகாட்டி நண்பர்கள்!’ | Youths fulfilled last wish of their friend after his death

வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (02/01/2018)

கடைசி தொடர்பு:15:28 (02/01/2018)

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி... நண்பரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய ‘வழிகாட்டி நண்பர்கள்!’

தங்களது நண்பர் டெங்குக் காய்ச்சலில் இறக்க, அவரது இறுதி ஆசையை ஐந்து மடங்காக நிறைவேற்றி, நட்புக்கு மரியாதை  செய்திருக்கிறார்கள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

  நண்பர்கள்

ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்தவர் சத்யா என்கிற சத்தியநாராயணன். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஃபீக் மற்றும் இருபது இளைஞர்களும் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘வழிகாட்டி நண்பர்கள்’ என்ற அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் மூலம் அப்துல்கலாம் நினைவு மற்றும் பிறந்தநாளின்போது மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் செய்தல், மாரத்தான் போட்டி நடத்துதல், அதில் கிடைத்த வருவாயை வைத்து ஏழை மாணவர்களைப் படிக்க வைத்தல், டெங்குவை ஒழிக்க மலைவேம்புக் கசாயம் கொடுத்தல் எனப் பல்வேறு நலப்பணிகளைச் செய்தனர்.

டெங்குவை ஒழிக்க ஊருக்கெல்லாம் மலைவேம்பு கசாயம் கொடுத்த சத்தியநாராயணன், கடந்த மாதம் டெங்கு பாதிப்பில் இறக்க, ‘வழிகாட்டி நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் விக்கித்துப் போனார்கள். இருந்தாலும், சத்யநாராயணனின் இறுதி ஆசையை மும்மடங்காக நிறைவேற்ற, ‘இதுவல்லவோ நட்பு!’ என்று ஒட்டுமொத்த கொடுமுடி பகுதியும் மெச்சிக்கொண்டிருக்கிறது. 

சத்யாவின் இறுதி ஆசை என்ன, அதை நிறைவேற்றியது எப்படி என அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரஃபீக்கிடம் கேட்டோம்.

 “கொடுமுடியைச் சேர்ந்தவர்தான் சத்யாவும். அவர் மரக்கடை வைத்திருந்தார். நானும் இதே ஊர்தான். நான் செல் சர்வீஸ் அண்ட் சேல்ஸ் கடை வைத்திருக்கிறேன். அப்துல் கலாம் ஐயாவுக்கு அஞ்சலி செலுத்த, கொடுமுடி பகுதி இளைஞர்கள் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தினோம். அப்போதுதான் சத்யா நட்பானார். அவருடன் நெருங்கிப் பழகியபோதுதான் அவருடைய சேவை மனப்பான்மையும், இரக்ககுணமும் தெரிந்தது. உடனே, அவர், நான் மற்றும் நண்பர்கள் இணைந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு `வழிகாட்டி நண்பர்கள்’ அமைப்பை ஆரம்பித்தோம்.

வழிகாட்டி நண்பர்கள்

அப்துல் கலாம் ஐயா 89 வயதில் இறந்ததால், முதலில் இங்குள்ள பள்ளிகளில் 89 மரக்கன்றுகளை நட்டோம். ஊர்முழுக்க இதுவரை 500 மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறோம். அப்துல் கலாமின் பிறந்தநாள், நினைவுநாளின்போது மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் செய்தல் போன்ற பணிகளைச் செய்தோம். இங்குள்ள 7 பள்ளிகளின் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு கொடுத்தோம். கடந்த நினைவுநாளின்போது கொடுமுடி ஒன்றியத்தைச் சேர்ந்த 600 பேர் கலந்துகொண்ட மாரத்தான் போட்டியை நடத்தி, அதில் திரட்டிய பணத்தைக் கொண்டு ஏழை மாணவ, மாணவிகளைப் படிக்க வைத்தோம். எங்கள் பகுதியில் ஆட்டிசம் பாதித்த, 14 மாற்றுத் திறனாளி மாணவர்களைக் கொண்ட பள்ளி இயங்கி வருது.

வழிகாட்டி நண்பர்கள்

அந்த மாணவர்களை ஊக்கப்படுத்த அவர்களுக்கு அடிக்கடி போட்டிகள் வைத்தோம். அந்தப் பள்ளியைத் தூய்மைப்படுத்தி, அங்கேயும் மரக்கன்றுகள் நட்டோம். அப்போதுதான் சத்யாவுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை வந்தது. கொடுமுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் வேல்முருகன், சின்ன வயதிலேயே டிராக்டரில் அடிப்பட்டு ஒரு காலை இழந்திருந்தார். 'வேல்முருகனுக்கு நம் அமைப்பின் சார்பில் செயற்கை கால் வாங்கித் தருவோம். கை, கால்கள் நல்லா இருக்கும் நமக்கே வாழ்க்கை மீது பயம் இருக்கு. அவருக்கு எவ்வளவு பயம் இருக்கும்? நாம் அவருக்கு கால் கொடுத்து, கூடவே நம்பிக்கை கொடுப்போம்'னு சத்யா சொன்னார். அவர் சொன்னதுபோலவே செயற்கை கால் கொடுத்தோம்.  

டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு எங்கள் பகுதியில் கடுமையா இருந்தது. அதைத் தடுக்க நினைத்த சத்யா, எங்கள் அமைப்பு மூலமாக மருத்துவ முகாம் நடத்தி, வீடு தவறாமல் அனைவருக்கும் மலைவேம்புக் கசாயம் கொடுத்தார். அவரும் குடித்தார். ஆனால், அவருக்கே டெங்குக் காய்ச்சல் வர, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். நாங்கள் துடிதுடித்துப் போனோம். 

வழிகாட்டி நண்பர்கள்

அவர் இறந்த மூன்றாம் நாளே அவரது மனைவி ஈஸ்வரி எங்களிடம்,  ‘அவர் இறுதியா மாற்றுத்திறனாளிகளுக்கு உதவணும்னு சொல்லிக்கிட்டு இருந்தார். அவர் ஆசையை உடனே நிறைவேத்துங்க’னு சொன்னாங்க. நண்பரின் ஆசையை உடனே நிறைவேற்றினால்தான், அவரது ஆத்மா சாந்தியடையும் என்கிற வைராக்கியத்தில், சில நாள்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஈஸ்வரன் கோயில் முன்பு பிச்சை எடுக்கும் இரண்டு கால்களும் செயலிழந்த பெண்ணுக்கு மூன்று சக்கர சைக்கிள் கொடுத்தோம். இன்னும் மூன்று ஆண்களுக்கும் செயற்கை கால்கள் பொருத்தினோம். முதியவர்கள் சிலருக்கு வாக்கிங் ஸ்டிக்குகள் வழங்கினோம். அந்த மாற்றுத்திறனாளி பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகளை நடத்தி, பரிசுகள் கொடுத்தோம். ‘சத்யாவின் இறுதி ஆசையை நிறைவேற்றியதில், அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும்' என்று நம்புகிறோம்.

 நண்பர்கள்

இனி, எங்கள் அமைப்புக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் சத்யாதான் வழிகாட்டி. சத்யாவின் முதல் நினைவுநாளின்போது, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் செயற்கை கால்கள், மூன்று சக்கர வண்டிகள் வழங்க இருக்கிறோம். சத்யா போல ஒரு நண்பனை, வழிகாட்டியை இழந்தது பெரும் இழப்பாக இருந்தாலும், எங்களுக்கு எல்லாமுமாக இருந்து அவர் வழிகாட்டுவார்” என்றார் ரஃபீக்.


டிரெண்டிங் @ விகடன்