`25 ஆண்டு நட்பைப் பிரித்த கொலை' - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்  | A murder which put an end to 25 years of friendship

வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (02/01/2018)

கடைசி தொடர்பு:12:23 (03/01/2018)

`25 ஆண்டு நட்பைப் பிரித்த கொலை' - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் 

தொழிலதிபர் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள்

சென்னையில் கொலைசெய்யப்பட்ட தொழிலதிபர் வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வழக்கில், ஏற்கெனவே கால் டாக்ஸி டிரைவர், தொழிலதிபரின் மனைவி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். ஜாமீனில் வெளியில் வந்த கால் டாக்ஸி டிரைவர் பழிக்குப்பழியாக, கடந்த டிசம்பர் மாதத்தில் கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டார். தொடர் கொலைச் சம்பவங்களால், 25 ஆண்டுக்கும் மேலாக இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை  ஈக்காட்டுத்தாங்கலில் வசித்துவந்தவர் உதயபாலன். இவரின் மனைவி உதயலேகா. இவர்களின் தந்தை இருவரும் 25 ஆண்டுக்கால நண்பர்கள். இதனால்தான் இருவருக்கும் ஒற்றுமையாக 'உதய' என்று தொடங்கும் பெயரைச் சூட்டினர். உதயபாலன், சென்னையில் எலெக்ட்ரிக்கல் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். இவர்களது சொந்த ஊர் காரைக்கால். 

உதயபாலன், அடிக்கடி வெளியூர் செல்வார். சொந்தமாகக் கார் இருந்தாலும் கால் டாக்ஸியில் செல்வது வழக்கம். அப்போது, கால் டாக்ஸி டிரைவர் பிரபாகரனுடன் அறிமுகமானார். உதயபாலன் இல்லாத சமயத்தில், உதயலேகாவும் கால் டாக்ஸியில் பயணித்துள்ளார். பிரபாகரனின் சொந்த ஊரும் காரைக்கால். இதனால் ஊர்பாசத்தால் நன்றாக அனைவரும் பழகினர். பிரபாகரனின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால், அவரின் குடும்பத்தினருக்கு பண உதவிகளைச் செய்துள்ளார் உதயலேகா.

பிரபாகரன், உதயலேகா ஆகியோரின் நட்பு குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. அதன் தொடர்ச்சி, உதயலேகாவுக்கும் உதயபாலனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்பமாகச் சென்ற இவர்களின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் உதயலேகா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். ஜூன்மாதம் 4-ம் தேதி, உதயபாலன், படுக்கையறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். கண்காணிப்பு கேமரா மூலம் உதயபாலனைக் கொலைசெய்தது கால் டாக்ஸி டிரைவர் பிரபாகரன் என்று தெரிந்தது. இதையடுத்து, கிண்டி போலீஸார் பிரபாகரனைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். 

உதயபாலன் கொலைகுறித்து உதயலேகாவின் தந்தை விசாரித்துவந்தார். அப்போது மருமகன் உதயபாலனின் மரணத்தில் சில சந்தேகங்கள் எழுந்தன. அதை தன்னுடைய நண்பன் சதாசிவத்திடம் உதயலோகாவின் தந்தை கூறினார். அதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதயபாலனின் அப்பா சதாசிவம் புகார் கொடுத்தார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, உதயபாலன் கொலையில் உதயலேகாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், உதயலேகாவும் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலைவழக்கில் பிரபாகரன், உதயலேகா ஆகியோர் ஜாமீனில் வெளியில் வந்தனர். ஜாமீனில் வந்த பிரபாகரன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொலைசெய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி, பிரபாகரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கூலிப்படையை ஏவியது உதயபாலனின் குடும்பத்தினர் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கொலையால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, குடும்பத்தினரின் நிம்மதியும் பறிபோய்விட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "உதயபாலன் கொலையில் கால்டாக்ஸி டிரைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்குமூலம் மற்றும் அவரின் போன் அழைப்புகள் மூலம் உதயலேகாவுக்கும் இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த கிண்டி போலீஸார், உதயலேகா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு புகார் வந்ததும் உதயலேகாவை கைதுசெய்தோம். அதைத் தொடர்ந்து கூலிப்படையினரால் கால்டாக்ஸி டிரைவர் பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுள்ளார். அந்த வழக்கில் கூலிப்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.