நெல்லையில் அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை திருநாள்!

நெல்லையில் பிரசித்திபெற்ற செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருநாள் விமர்சையாக நடைபெற்றது. சுவாமியின் ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்றனர்.

திருவாதிரை திருநாள்

நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் சிவபெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை உள்ளது. இது நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்த திருக்கோயிலில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த டிசம்பர் 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று விமர்சையாக நடைபெற்றது. 

இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட 24 வகையான அபிஷேகப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோ பூஜை நடந்தது. பின்னர், ஆருத்ரா தரிசனத்தின்போது சுவாமிக்கும் பசுவுக்கும் ஒருசேர தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நமசிவாய கோஷம் எழுப்பினார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!