தஞ்சையில் ஆளுநருக்காகவே போடப்பட்ட வைக்கோல் `புரட்சி'

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தூய்மை பாரதம் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகவே தஞ்சாவூர் மாநகராட்சியினர், வைக்கோல் கொண்டு வந்து சாலையில் கொட்டிய விநோதம் நடந்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகையையொட்டி கடந்த இரண்டுநாள்களாகப் புதிய பேருந்து நிலையம் பகுதி சுத்தமாகக் கூட்டி, பளபளப்பாக வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் சாலையில் இறங்கி துடைப்பத்தால் கூட்டி சுத்தம் செய்ய இருப்பதால் அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள் என ஆளுநருடன் வந்திருந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் புத்தம் புதிய வைக்கோல் எங்கு கிடைக்கும் என மாநகராட்சி ஊழியர்கள் தேடி அலைந்து கண்டுபிடித்து சாலையில் தூவினார்கள்.

இந்த இடத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட ஆளுநர், சாலையில் கிடந்த வைக்கோலை கூட்டிப்பெருக்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள் அந்த வைக்கோலைக் குப்பைத் தொட்டியில் கொண்டு கொட்டினர். ஆளுநருக்காக வைக்கோலை சாலையில் கொட்டி அதைச் சுத்தம் செய்த நிகழ்வு தஞ்சாவூரில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இன்று மாலை வரை தஞ்சையில்தான் இருக்கிறார் ஆளுநர். இன்னும் என்னென்ன காமெடி நாடகங்கள் நடக்குமோ எனத் தஞ்சைவாசிகள் நக்கலடித்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!