வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (02/01/2018)

கடைசி தொடர்பு:16:37 (02/01/2018)

"300 ரூபா கூலிக்கு வேலை கிடைச்சாப் போதும்!’’ - கலங்கும் பார்வையற்ற விவசாயி

கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே உள்ள பனப்பள்ளி என்ற மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். தலையில் உள்ள நரம்புகளில் ஏற்பட்ட பிரச்னையால் சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். பார்வையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத, தன்னம்பிக்கை இளைஞன். வீட்டில் முடங்கி கிடக்கப் பிடிக்காமல் காட்டில் விறகு பொறுக்குவது, தங்களுக்கு இருக்கும் சிறிய நிலத்தில் விவசாயம் செய்வது, எலக்ட்ரானிக் வேலை செய்வது, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு செல்வது, கூலி வேலை செய்வது, அருகில் உள்ள மலைக் கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று கிராமியப் பாடல்கள் பாடுவது, ட்ரம்ஸ் அடிப்பது என்று ஓடியோடி உழைத்து வருகிறார் இந்த மிஸ்டர் தன்னம்பிக்கை.

விவசாயி பெருமாள்

ஆனைகட்டி அருகில் உள்ள, ஜம்புகண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பத்மா என்ற மாற்றுத்திறனாளியைக் காதலித்துக் கரம் பிடித்துள்ளார் பெருமாள். 100 நாள் வேலைத் திட்டத்துக்குச் செல்வது, தோட்ட வேலை, வீட்டுவேலை என்று பத்மாவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். பெருமாளின் வீட்டிலிருந்து, அவர்களது காட்டுக்கு அரை கி.மீ நடந்து செல்ல வேண்டும். மேடு, பள்ளம், பாறைகள் நிறைந்த அந்தப் பாதையை யாருடைய உதவியும் இல்லாமல் கடந்து வருகிறார் பெருமாள்.

விவசாயி பெருமாள்

பெருமாளின் காட்டுக்குச் சென்றோம். ராகி, அவரை, சில கீரைகள் காட்டில் போடப்பட்டுள்ளன. "எங்களுக்கு அரை வயிறு கஞ்சிய இந்தக் காடுதான் நிரப்பும். அதிகமா இருந்தா மார்க்கெட்ல விற்போம்" என்றவரிடம் அவர்களின் காதல் கதையைக் கேட்டோம். "ஆனைகட்டில 100 நாள் வேலைத் திட்டத்துலதான் பத்மா அறிமுகமாச்சு. எனக்கு இங்க சாப்பாட்டுக்கு பிரச்னை. காலைல 9 மணிக்கெல்லாம் வேலைக்கு வரணும். பத்மாவ ரொம்பப் புடிச்சிருந்துச்சு. அவங்க பிரச்னையும் தெரியும். அதனால ரெண்டாவது நாளே கல்யாணம் பண்ணிக்கலாமாணு கேட்டுட்டேன்" என்று சொல்லும்போது, பரவசத்தில் பறக்கின்றன பெருமாளின் விழிகள். "அப்பறம் நடந்ததை நா சொல்றேன் சார்’’ என்று தொடர்கிறார் பத்மா.

விவசாயி பெருமாள்

"இவரு சொன்ன அடுத்த நாள் நா வேலைக்கு வரல. அதுக்கப்பறம் வேலைக்கு வந்தாலும் மனசு என்னமோ மாதிரி இருந்துச்சு. சாப்டகூட முடியல. சாப்பாட கொட்டிட்டேன். அண்ணிக்கு இவரும் சாப்டல. அதுக்கப்பறம் நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போகல. இவரு, அவங்க அத்தய தூதுவிட்டாரு. 'நீ சம்மதம் சொல்ற வரைக்கும், அவங்க வீட்ல யாரும் வேலைக்குப் போக மாட்டாங்களாம். ஏதாவது பண்ணிப்பாங்களாம்ணு' அவங்க அத்த சொன்னாங்க. அவரு அப்படி கேட்டப்ப, நா போடாணு சொல்லிட்டேன். ஆனா, இவர பார்த்தப்பவே எனக்கும் புடிச்சிருச்சு.  அப்பறம்தான் என்னடா இப்படி சொல்லிட்டமேன்னு யோசிச்சேன். அவரோட, பசங்க, பொண்ணுங்க ப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்க எல்லா `பெருமாள் சொன்னதுக்கு ஏன் பதில் சொல்லலை’ணு ஊரே ஒண்ணு கூடிருச்சு. அதுக்கப்பறம் ரெண்டு குடும்பமும் பேசி கல்யாணம் பண்ணிட்டோம். ஒரு வருஷம் ஆச்சு. என் அம்மா வீட்ல இருந்ததவிட, இப்பத்தான் சந்தோஷமா இருக்கேன்" என்று சொல்லும்போது, பத்மாவின் கண்கள் பனிக்கின்றன.

விவசாயி பெருமாள்

பத்மாவின் குரல் மாறுவதைத் தெரிந்து ஃபன் மோடுக்குத் தாவுகிறார் பெருமாள். "சார், இன்னிக்கு ஒரு பொண்ண லவ் பண்ண வைக்கிறது  எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கே தெரியும். டவுன்ல இருக்கற பசங்க யாராவது பார்த்த ஒரே நாள்ல ஒரு பொண்ண கரெக்ட் பண்ண முடியுமா?" என்று பெருமாள் கேட்க பத்மாவின் சிரிப்பு அந்தப் பகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.

"வீட்ல துணி துவைக்கறது, சமைக்கறதுணு எல்லா வேலையும் பண்ணுவாரு. நாங்க துவைச்சா அவருக்கு புடிக்காது. சுத்தமா இல்ல. வாசமா இல்லணு. அவரு திரும்பியும் துவைப்பாரு. அதே மாரி பூட்டு சாவி தொலைஞ்சுட்டா, வேற சாவிய வெச்சோ, ஹேர்பின் வெச்சோ இவரு பூட்ட திறந்துருவாரு. உடைக்க மாட்டாரு" என கணவரின் பெருமையை அடுக்குகிறார் பத்மா.

விவசாயி பெருமாள்

"நமக்கு பொழுதுபோக்கு டி.வி-யும், ரேடியோவும்தான் சார். அதுல கொஞ்சம் சவுண்டு மாறுச்சுண்ணாலே, என்ன பிரச்னைனு கண்டுபிடிச்சு சரி பண்ணிடுவேன். இப்ப இருக்கற விலை வாசிக்கு நாங்க தியேட்டருக்கு எல்லா போக முடியாது. எனக்கு விஜயகாந்த்தான் ரொம்பப் பிடிக்கும். அவருதான் ஏழை மக்களுக்கு துணையா, நல்லா கருத்தா நடிப்பாரு. ஆனா, இப்ப சில நடிகருங்க எல்லா ஓவரா பண்றாங்க..." என்று கோடம்பாக்கத்தை கலாய்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

விவசாயி பெருமாள்

"சார், இப்ப அரசாங்கத்திடமிருந்து எனக்கு ஓ.ஏ.பி. 1000 ரூபா வருது. அப்பறம் கிடைக்கற வேலைய செஞ்சு ரெண்டு வேளை வயித்த நெரப்பிட்டிருக்கோம். இப்ப இருக்கற நெலமைக்கு, குறைஞ்சது ஒரு நாளுக்கு 300 ரூபா கிடைக்கற மாதிரி ஒரு வேலை கிடைச்சாப் போதும். மனசு முழுசா நம்பிக்கை இருக்கு சார். ஆனா, எவ்வளவு நம்பிக்கையும், திறமையும் இருந்தாலும் எனக்குக் கண்ணு தெரியாதுதானே. என்னடா அடுத்தவங்களவிட திறமை இருந்தும், நம்ம சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோமே அப்டிங்கறதுதான் உறுத்திட்டே இருக்கு. இந்தக் கண்ணு மட்டும் சரியாகிட்டா போதும். எல்லாரயும் உக்கார வெச்சு சாப்பாடு போடுவேன் சார்" என்று நரம்புகள் புடைக்க கணீர் குரலில் முடித்தார் பெருமாள்.


டிரெண்டிங் @ விகடன்