வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (02/01/2018)

கடைசி தொடர்பு:18:45 (02/01/2018)

`மருத்துவத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்' - போராட்டத்தில் பொங்கிய அரசு மருத்துவர்கள்

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்கள். அதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஒரு மணி நேர அடையாள ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தங்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

இதுப்பற்றி அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, ``பள்ளிகளில் படித்து பல தரப்பட்ட தகுதித் தேர்வுகள் எழுதி மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி மருத்துவர் பணிக்கு பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதற்கு நீட் தேர்வு தேவையற்றது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களுக்குதான் நீட் தேர்வு தேவை; இங்கிருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தேவையற்றது. அதை அரசு நீக்க வேண்டும். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற கமிஷன் மூலம்தான் மருத்துவத்துறை இயக்கப்பட்டு வருகிறது. அதைக் கலைத்துவிட்டு புதியதாக ஒரு கமிஷனை ஏற்படுத்தி அதில் மருத்துவத்துறையை இல்லாதவர்களை நியமித்து மருத்துவத் துறை இயக்கப்படுவது ஆபத்தானது. அதனால் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பை மீதும் செயல்படுத்த வேண்டும்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு நிகராக ஆயுர்வேதிக், யுனானி, சித்தா பயிற்சி கொடுக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. ஒவ்வொன்றும் தனித்தனி துறையாக இருப்பதால் அனைத்தும் ஒருவருக்கு பயிற்சி கொடுப்பது சிறந்தது அல்ல. மருத்துவத்தைப் பாதிப்பதோடு மருத்துவத்தில் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். அதனால் தற்போது இருப்பதுபோல தனித் தனியாகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நோயாளிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் எங்களுடைய அடையாள ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுகிறோம்'' என்றார்.