வெளியிடப்பட்ட நேரம்: 18:19 (02/01/2018)

கடைசி தொடர்பு:18:19 (02/01/2018)

பஸ் முகப்பு, புரொஜெக்டர், ரேடியோ, டேப் ரெக்கார்டர்... புதுக்கோட்டையை அசத்தும் விநோத டீக்கடை!

‘கவண்’ படத்தில் வரும் டி.ஆரின் மீடியா அலுவலகம் போல விநோதமாக இருக்கிறது அந்த டீக்கடை. முதன்முதலாக அந்த டீக்கடையைப் பார்ப்பவர்கள் மெல்லிய சிரிப்போடு கடந்துபோகிறார்கள். அல்லது, ஒரு டீ சாப்பிட உள்ளே நுழைந்து அடுத்தடுத்த ஆச்சர்யங்களில் புருவம் உயர்த்துகிறார்கள். சாதாரண டீக்கடையில் அப்படி என்ன விசேஷம்?

டீக்கடை

புதுக்கோட்டை நகரில் தெற்கு பிரதான வீதியில் இருக்கிறது ரெங்கா காபி பார். வெளியே டீ போடும் இடம் பஸ் போன்ற முகப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது போல, இது பெரிதாக ஆச்சர்யமளிக்கும் விஷயம் இல்லைதான். வியாபாரத்துக்காக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இதுபோன்ற யுக்திகள் தமிழ்நாடு முழுக்க விரவிக்கிடக்கின்றன என்று புறம் தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில், அந்தச் சின்னக் கடையில் காட்சிப்படுத்தியிருந்த மற்ற விஷயங்களைப் பார்க்கும்போதுதான், இது வியாபார யுத்தி இல்லை, அதையும் தாண்டி ஒரு தனிமனிதனின் கலை உணர்வு சம்பந்தப்பட்டது என்பது புரிந்தது.

டீக்கடை
 

சுற்றிலும் சுவர்களில் அந்தக்கால நினைவுகளைக் கிளறும் விதமாக பல வழக்கொழிந்த, ஆனால், நம் உள்ளத்தின் கிடங்குக்குள் நினைவுப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கிடக்கும் பழங்கால பொருள்கள் பலவும் அங்கே அலங்காரமாகப் பொருத்தப்பட்டிருந்தன. 35 mm சினிமா புரொஜெக்டர் ஃபிலிமுடன் இருந்தது. சிறிய கிராமஃபோன், தோசைக்கல் வடிவிலான இசைத்தட்டு, பெரிய சைஸ் முதல் பாக்கெட் சைஸ் வரை விதவிதமான ரேடியோக்கள், டேப் ரெக்கார்டர், அதற்குள் போடப்படும் ஒலிநாடா, சின்ன கேமரா போன்றவை சுற்றிலும் வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே நவீன ஓவியங்களும் இருந்தன. இவற்றுக்கென்று பிரத்யேகமான லைட்டிங்கும் பொருத்தப்பட்டிருந்தது. இது தவிர, குடிப்பதற்கு செப்புத் தவலையில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. செப்பு மூடியின் மேலாக, செப்பு டம்ளரும் இருக்கிறது. செப்பு டம்ளரில் தண்ணீர் குடிக்க யோசிப்பவர்களின் வசதிக்காக சில்வர் டம்ளரும் இருக்கிறது.


டீக்கடை

குடிக்க டீ அல்லது காபி கேட்டால், செப்பு டபரா செட்டில் வருகிறது. இதுதவிர, பைன் ஆப்பிள் பஜ்ஜி, உலர் திராட்சை பக்கோடா, சப்போட்டா கேசரி, சுழியம், பனைவெல்லம் குழிப்பணியாரம் என்று இடைப்பலகாரம் விதவிதமாக ஈர்க்கிறது. இவற்றுடன் வழக்கமான பூரி, பொங்கல், சப்பாத்தி போன்ற சிற்றுண்டிகளும் காலை, மாலை வேளைகளில் கிடைக்கிறது. வைத்திருப்பது டீக்கடை என்பதால், அந்தக் காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த டீ மாஸ்டர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அழகாக சட்டகம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

'சின்ன டீக்கடையில் இத்தனை கலை உணர்வா?' என்ற வியப்புடன் கடை உரிமையாளர் நாகராஜனை சந்தித்துப் பேசினோம்.  ‘‘அப்பா ஆப்செட் பிரஸ் வைத்திருந்தார். இயல்பாக நான் ஓவியன் என்பதால், பழங்காலப் பொருள்களை சேகரிக்கும் பழக்கமும் இருந்தது. ​​​அத்துடன் இணையத்தில் நம் நாட்டின் தொன்மை வாய்ந்த விஷயங்களைத் தேடி, அவற்றை சேகரிப்பேன். டீகடைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அனுபவமும் இல்லை. இந்தக் கடை இருக்கும் இடம் எனக்குச் சொந்தமானது. சும்மாதானே இருக்கிறது. ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாமே என யோசித்தபோது, எனக்குச் சட்டென டீக்கடைதான் நினைவுக்கு வந்தது. அது வழக்கமான டீக்கடையாக இல்லாமல், புதுக்கோட்டையிலேயே வித்தியாசமாக இருக்க வேண்டும் என  யோசித்தேன். நான் சேகரித்து வைத்திருந்த பழங்காலப் பொருள்கள் அதற்கு உதவியாக இருந்தது. புதுக்கோட்டை மக்கள் இன்னும் பழைமை மாறாதவர்களாக இருக்கிறவர்கள்தாம். அதனாலோ என்னவோ என் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது" என்றார். 

"இந்தக் கடை ஆரம்பித்து ஆறு மாதங்கள்தாம் ஆகிறது. ஆனாலும், இதே மாதிரி இன்னொரு கடையை திருவப்பூரிலும் ஆரம்பிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்கள் எல்லோரும் 'அவசரப்படவேண்டாம். ஒரு வருஷம் கடந்தபிறகு இன்னொரு பிராஞ்ச் ஆரம்பிக்கலாம்' என்றனர். ஆனால், கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களின் ஆர்வமும், நல்ல உணவுக்குக் கொடுக்கும் ஆதரவும் என்னை பிரமிக்கவைத்தது. சின்ன டீக்கடையில் ஆரம்பித்து, பெரிய பெரிய மால் வரை எதை வைத்தாலும் அதற்கு மக்களுடைய ஆதரவு கிடைத்தால், ஜெயித்துவிடலாம் என்பதை இந்த ஆறு மாதங்களில் புரிந்துகொண்டேன். அந்த தைரியத்தில்தான் இன்னொரு கிளை ஆரம்பிக்கும் முடிவுக்கு வந்தேன்" என்கிற நாகராஜனுக்கு வயது 36.

இங்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் நாகராஜனின் நண்பர்கள். "எனக்குத்தான் டீக்கடை அனுபவம் இல்லையே தவிர, என் நண்பர்கள் பல வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள்தாம் என் முதுகெலும்பு" என்றார் நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்