விடுமுறையைக் கழித்து பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிர்ச்சியளித்த சம்பவம்!

திருப்போரூர் தொடக்கப்பள்ளியில் அரையாண்டு விடுமுறையைப் பயன்படுத்தி சேர், மின்விசிறி உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு

திருப்போரூரில் அரசு தொடக்கப் பள்ளி கடந்த 125 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மலை அடிவாரத்தில் பள்ளி அமைந்திருப்பதால் அதிக அளவில் ஆள்நடமாட்டம் இருக்காது. அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் விடுமுறை காரணமாக கடந்த ஒன்பது நாள்களாக பள்ளி பூட்டப்பட்டிருந்தது. பள்ளிக்கு ஆசிரியர்கள் உட்பட அப்பகுதியினர் யாரும் வரவில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், பள்ளியிலிருந்த நான்கு மின்விசிறி, இரண்டு மரபென்ச், 60 பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இன்று பள்ளி தொடங்கிதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது நாற்காலி, மின்விசிறி ஆகியவை காணாமல் போனதை பார்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தலைமை ஆசிரியர் மேரி ஸ்டெல்லா பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். பின்பு திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் தரையில் அமர்ந்து பாடம் படிக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பள்ளிக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!