சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம்

சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். நடராஜ பெருமான் வீதி உலா சென்றிருக்கிறார். இரவு 8 மணிக்கு திருக்கோயிலுக்குத் திரும்பி வருவார். நாளை மகா அபிஷேகம் நடைபெறும். அதையடுத்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதுபற்றி சுகவனேஸ்வரர் ஆலயத்தின் குருக்கள், ''ஆருத்ரா அபிஷேகம் என்பது நடராஜ பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம். மற்ற கடவுள்களுக்குப்போல நடராஜருக்கு தினந்தோறும் அபிஷேகம் (நித்திய அபிஷேகம்) செய்யப்படுவதில்லை. வருடத்தில் 6 அபிஷேகங்கள் மட்டுமே நடராஜ பெருமானுக்கு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மற்ற ஆலயங்களைக் காட்டிலும் சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில்  ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பு என்னவென்றால் சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் காலையில் அபிஷேகம் செய்து காலையே தரிசனம் செய்யப்படும். ஆனால், சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நடராஜருக்கு இரவு முழுவதும் 64 திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.

அதற்கு காரணம் இங்கு வாழ்ந்த சுக பிரம்ம ரிஷி இங்குள்ள நடராஜருக்கு இரவு முழுவதும் அபிஷேகம் செய்தார் என்பதால் தொன்றுதொட்டு இரவு முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது. அடுத்த நாள் காலை மக்களுக்குத் தரிசனம் கொடுத்துவிட்டு திருவீதி உலா கிளம்புவார். பகல் முழுவதும் அம்மாப்பேட்டை, பட்டகோயில், கிச்சிப்பாளையம் பகுதிகளுக்குச் சென்று இரவு 8 மணிக்கு திருக்கோயிலுக்குள் நுழைவார். அடுத்த நாள் காலை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் வழக்கத்தைவிட பொதுமக்கள் அதிகளவில் கோயிலுக்கு வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!