காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு செய்து வருகின்றனர்.

சோமாஸ் கந்தர், ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ‘சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால் புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015-ல் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இந்து அறநிலைத்துறையின் உத்தரவின் பேரில் 50 கிலோ எடையில், 2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016 டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிதாகச் செய்யப்பட்ட இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம் கலக்கப்படவில்லை. உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரும் அவரின் மகன்களான தினேஷ், பாபு என்பவர்களும் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோயில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சிலைகடத்தல் பிரிவு டி.எஸ்.பி தலைமையில் 10 சிலைகடத்தல் பிரிவு காவலர்களும் காஞ்சிபுரம் டி.எஸ்.பி முகிலன் உட்பட 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்துள்ளனர். சோமாஸ் கந்தர் புகாரின் அடிப்படையில் சிலை கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!