வைகை ஆறு விபரீதம்! தாயின் அழுகுரலுக்கு நீதி கிடைக்குமா?

வைகை ஆற்றில் பல ஆண்டுகளுக்குப் பின்... மழையின் காரணமாக அதிக அளவு தண்ணீர் கடந்த சில வாரங்களுக்கு முன் திறந்துவிடப்பட்டது. பாய்ந்துவந்த நீரைக் காணச் சென்ற சிறுவர்கள், கரையிலிருந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் விழுந்து மாயமானர்கள். அதில், இரண்டு பேரில் ஒருவரை மட்டும் மீட்க முடிந்தது. 24 நாள்கள் கடந்தும் ஜெயசூர்யா என்ற சிறுவனை மட்டும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆற்றில் காணாமல்போன சிறுவனின் தாய் ருக்மணி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அளித்துள்ளார். அந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் வேளையில் ருக்மணியிடம் பேசினோம். 

 

வைகை

 

“எனது கணவர் ஆசிரியராக உள்ளார். நான் கோச்சிங் வகுப்புகள் எடுத்துவருகிறேன். எங்களுக்கு தினேஷ், ஜெயசூர்யா என்று இரண்டு மகன்கள். மூத்தவன் தினேஷ் எம்.பி.பி.எஸ் படிக்கிறான். இளையவன் ஜெயசூர்யா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றுக்காக வெளியூர் சென்றபோது... திடீர் என்று ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், 'உங்கள் மகன் ஆற்றில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மண் சரிந்து தண்ணீரில் விழுந்துவிட்டான்' என்று கூறினார்கள். உடனடியாக ஆழகர் ஆற்றில் இறங்குமிடத்துக்குச் சென்றோம். அங்கு என் அண்ணன் மகனும் என் மகனும்தான் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாகத் தவறி தண்ணீரில் விழுந்துள்ளனர். இதில், என் அண்ணன் மகனை மட்டும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டிருக்கின்றனர்.  என் மகன் எங்கே சென்றான் எனத் தெரியவில்லை. பின் காவல் துறையினரும், தீயணைப்புப் படையினரும் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் போதிய பாதுகாப்புக் கருவிகளும் , மீட்பு உபகரணங்களும் இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, என் மகனைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி, போராட்டத்தில் குதித்தோம். அதற்குப் பின் தேடினார்கள். ஆனாலும் என் மகன் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், என் மகன் எப்படியாவது கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்தோம். அதை, நீதிபதி அவசர வழக்காக எடுத்து விசாரித்தார். போலீஸார் பல கோணங்களில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், 'சிறுவன் ஆற்றில் விழுந்தவுடன் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கலாம்' என்று தெரிவித்தனர். அதைக் கேட்டவுடன், எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள்? அது, அவர்களுடைய வேலை. அதைச் சுலபமாகச் செய்துவிட்டனர். ஆனால், மகனை இழந்து வாடும் தவிப்பு என்பது பெற்றவளுக்குத்தானே தெரியும். என் மகனுக்கு என்ன ஆயிற்று என்று இதுவரை தெரியவில்லை. அவனைச் செல்லமாக வளர்த்தோம். இப்படி நடக்கும் என்று கொஞ்சம்கூட நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போதுகூட கண்ணீர்விடத் தெம்பு இல்லாமல்தான் இங்கே நிற்கிறோம்'' என மெல்லிய குரலில் பேசியபடி கண்ணீர் வடித்தார் .

வைகை

 

இந்த நிலையில், மீண்டும் இம்மனு குறித்தான விசாரணை விரைவில் வரவிருக்கிறது. ஆகவே, இதுதொடர்பாகப் பெண்கள் சமூக அமைப்பினரிடம் பேசினோம். ''வைகை ஆற்றில் விழுந்த சிறுவனை மீட்க நம்மிடம் போதுமான கருவிகளோ, மீட்புக் குழுவோ முறையாக இல்லை. மிகப்பெரிய நகரமான மதுரையிலேயே இவ்வளவு அலட்சியப்போக்கு என்றால், மற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்படி இருக்கும்? முறையான மீட்புக் குழு இல்லாததுதான் மிகப்பெரிய அவமானம். தற்போது செல்ஃபி மோகத்தில் பலர், உயிரைப் பறித்துக்கொள்கின்றனர். அரசு, இதில் தனிக்கவனம் செலுத்தி செல்ஃபியின் ஆபத்து பற்றி முறையாக விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!