வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/01/2018)

கடைசி தொடர்பு:22:00 (02/01/2018)

நெல்லையில் வார்டுகளின் மறுவரையறைக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு!

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு இருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து முறையிட்டனர்.  

அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றின் வார்டுகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறு வரையறை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது அதில், சில இடங்களில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வார்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த மறு வரைமுறை செய்யப்பட்டதில், ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதாகவும், அவர்களுக்குச் சாதகமான முறையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் தி.மு.க., ம.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். வார்டுகளின் வரைவு எல்லை குறித்த தகவலில் முரண்பாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் 14 ஆக இருந்த வார்டுகள் 12 ஆகக் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதேபோல, பத்தமடை கேசவசமுத்திரம் 15 வது வார்டில் இருந்த வாக்காளர்கள் தற்போது 4 கி.மீ தொலைவில் உள்ள கரிசூழ்ந்தமக்கலம் கிராமத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். ம.தி.மு.க மாவட்டச் செயலாளரான தி.மு.ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், `மேலநீலித்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் 11 வது வார்டுக்கு உட்பட்ட திருமலாபுரம் கிராம வாக்காளர்களை குருக்கள்பட்டி வார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. அதை மீண்டும் அருகில் இருக்கும் பனவடலிச்சத்திரத்துடன் இணைக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். 

தி.மு.க எதிர்ப்பு

நெல்லை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளையும் குழப்படியான நிலையில் சேர்த்து இருப்பதாக நெல்லை சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல்வகாப் ஆகியோர் ஆட்சியரிடம் முறையிட்டனர். மறு வரைமுறை என்ற பெயரில் மாநராட்சி வார்டுகளின் எல்லையை சீரமைத்து இருப்பது சாதிய பிரசனைக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.