வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (02/01/2018)

கடைசி தொடர்பு:22:15 (02/01/2018)

மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் மருத்துவர்கள் போராட்டம்..!

இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்காக  மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மதுரையில், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் மதுரை அரசு மருத்துவர் சங்கத்தினர் ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, கருப்புப் பட்டை அணிந்து, பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பலகைகளைக் கையில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். 'இந்த மசோதா தனியார் மருத்துவத்தை ஊக்குவிக்கும் எனவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும்' போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் வேதனை தெரிவித்தனர்.

'நீட்' தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் நமது மாணவர்கள். பிறகு ஐந்தரை ஆண்டுகள் படித்து, அதற்குப் பிறகும் ஒரு தேர்வு எழுதிய பின்னர்தான் மருத்துவராக முடியும். ஆனால், தந்தை பாரம்பரிய மருத்துவராக இருந்தால், அவரின் மகன் இரண்டு வருடம் மேற்கொள்ளும் பயிற்சியின் வாயிலாக அவரும் மருத்துவராக ஆகிவிடலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. 

முறையான மருத்துவப் படிப்பை மேற்கொள்ளாமலேயே தங்களை மருத்துவராக அறிவித்து செயல்படலாம் எனும் அடிப்படையில் இன்று நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இது மருத்துவ விதிகளுக்கு எதிரானது' என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.