போக்குவரத்துத்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..! | High court ordered to Transport chief secretary

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (02/01/2018)

கடைசி தொடர்பு:22:45 (02/01/2018)

போக்குவரத்துத்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் "புகைக்கட்டுப்பாடு என்பது அவசியமான ஒன்று. அதிலும் வாகனங்கள் புகைக்கட்டுப்பாடு முக்கியமானது. எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய நோய்களால் உயிரிழந்தவர்களை விட அதிகம் சுற்றுச்சூழல் பாதிப்பால் இறந்தவர்கள்தாம் அதிகம் என 'தலான்செட்' என்ற மருத்துவ இதழ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று மற்றும் நீர் மாசால் உயிரிழந்தவர்களின் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிகமாக வாகனப்புகை வெளியேறுவது தொடர்ந்தால், தமிழகம் சுடுகாடாக மாறும்நிலை உருவாகும். இது குறித்து மாநில அரசின் முதன்மைச்செயலர், போக்குவரத்துத்துறைச் செயலர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் தாலுகா அளவில் சில பறக்கும் படைகளை அமைத்து வாகனப் புகைச் சான்றிதழ் பெறப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்து, அதிக புகை  கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, தொடர்ந்து தவறினை மேற்கொள்பவர்களின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு இது குறித்து தமிழகப் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர், பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு  ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.