வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (02/01/2018)

கடைசி தொடர்பு:23:40 (02/01/2018)

புத்துணர்வு முகாமில் பங்கேற்க புறப்பட்டுச் சென்ற நெல்லையப்பர் கோயில் யானை..!

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்க நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானை லாரி மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. 

லாரியில் காந்திமதி

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக ஒவ்வொரு வருடமும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் இந்த முகாமில் பங்கேற்று வருகின்றன. ஜனவரி 4-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் தொடங்கவிருக்கும் இந்த முகாம் 48 நாள்கள் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தமிழகம் முழுவதிலுமிருந்து 39 யானைகள் பங்கேற்க உள்ளன.

பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையுடன் கூடிய புத்துணர்வு சூழல் உருவாக்கப்படும். அத்துடன், யானைகளின் உடல் எடை பராமரிப்பு மூலிகை மருந்து உணவுகள் வழங்குதல் போன்றவையும் நாள்தோறும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படும். பவானி ஆற்றுப் படுகையில், இயற்கையான சூழலில் நடைபெறும் இந்த முகாமில் யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்க உள்ளன. 

இந்தப் புத்துணர்வு முகாமுக்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து 9 யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டன. நெல்லையிலிருந்து நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான யானையான காந்திமதி, இன்று புறப்பட்டுச் சென்றது. ம.தி.தா.இந்துப் பள்ளியின் கலையரங்கத்தின் மேடையிலிருந்து லாரியில் காந்திமதி யானையை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, யானை மிகுந்த ஒத்துழைப்புடன் லாரியில் ஏறியது. நெல்லையப்பர் கோயிலின் நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் காந்திமதி யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். 

புத்துணர்வு முகாமுக்கு பயணம்

முன்னதாக, காந்திமதி யானை புறப்பட்டுச் செல்லும் முன்பாக கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. லாரியில் ஏற்றிய பின்னரும் யானைக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் ரோஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த யானைகளுடன் உதவி ஆணையர் சாத்தையா தலைமையில் ஆய்வாளர்கள் முருகன், ரவீந்திரன் மற்றும் பாகன்கள் உடன் சென்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க