வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (03/01/2018)

கடைசி தொடர்பு:00:30 (03/01/2018)

ராமநாதபுரம் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை: கருத்துகள் தெரிவிக்க காலக்கெடு நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் காலக் கெடுவினை இம்மாதம் 5-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு செய்துள்ளார்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறைக்கான கருத்துருவினை கடந்த 27 ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இது தொடர்பாக பொதுமக்களின் பார்வைக்கு விளம்பரம் செய்து இந்த வார்டு மறுவரையறை தொடர்பான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஜனவரி 2-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

உள்ளாட்சி வார்டு மறுவரையறை பட்டியல் வெளியீடு

ஆனால் வார்டு மறுவரையறை தொடர்பான ஆட்சேபத்தினைத் தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த மேற்படி காலஅவகாசம் போதுமானதாக இல்லையெனவும் கூடுதல் கால அவகாசம் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்களிடமிருந்து மறுவரையறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடந்தது. 
இந்நிலையில் வார்டு மறுவரையறை தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிக்க ஜனவரி 5-ம் தேதி முதல் மாலை 5 மணி வரை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வார்டு மறுவரையறை ஆணையம் அனுமதித்துள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களைத் தெரிவித்திடலாம் எனவும்  மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் அறிவித்துள்ளார்.