பழுதடைந்த சாலைகள்...5 கி.மீ நடந்து சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட, நீலிக்கோணாம்பாளையம் சாலையை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்தி பார்வையிட்டார்.

ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் அருகே வசந்தா மில் அருகே நீலிக்கோணாம்பாளையம் சாலை, விஜயலட்சுமி நகர், தாமோதரசாமி லே அவுட் பகுதி சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அதேபோல, நீலிக்கோணாம்பாளையத்தில் இருந்து வசந்தா மில் செல்லும் சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. இதனை, சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்தி சுமார் 5 கி.மீ தூரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அந்தப் பகுதி மக்களிடம் அவர் கருத்துகளை கேட்டறிந்தார். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளையும் அவர் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ கார்த்தி, "இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். இதையடுத்து, கோவை மாநகராட்சி கமிஷனரை சந்தித்தேன். அந்த சாலைகளை சீரமைக்க கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதீப்பீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கார்த்தி

ஆனால், தற்போதுவரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளை இன்று சந்தித்தபோது, கோவையில் 24 7 அடிப்படையில் குடிநீரை விடுவதற்கு திட்டமிட்டுவருவதாகவும், அந்தப் பணிகளுக்காக, தற்போதுவரை எந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டாம் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்திற்கு இன்னும் டெண்டரே விடப்படவில்லை. எப்படி இருந்தாலும் அதற்கு 7 மாதங்கள் ஆகும். இன்று ஆய்வு செய்த பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. எனவே, அந்தச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால், தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!