எங்களுக்குப் பதில் ஸ்லீப்பர் செல்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.! − பகீர் கிளப்பும் தினகரன் தரப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் (தேனி மாவட்டம்) வார்டு மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக பன்னீர்செல்வம் − எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், முன்னாள் எம்.பி.சையதுகான், முருக்கோடை ராமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தி.மு.க சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி போன்ற பல கட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுக்கவில்லை.

டி.டி.வி தினகரன் தரப்பு ஆதரவாளர்களைக் கூட்டத்தில் பார்க்க முடியவில்லை. இதுதொடர்பாக டி.டி.வி தினகரன் ஆதரவாளரும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச்செயலாளருமான மணியிடம் பேசினோம். "அழைப்பு கொடுக்கப்பட்டது. நாங்கள்தான் புறக்கணித்தோம். நாங்கள் வரவேண்டும் என்று அவசியமில்லை. எங்கள் ஸ்லீப்பர் செல்கள்தான் கூட்டத்தில் கலந்துகொண்டார்களே. அவர்கள் மூலம் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற தகவல் வந்துவிட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தான் வெற்றிபெறப் போகிறோம். இவர்கள் ஏன் அடித்துப்பிடித்து அங்கே ஓடிச்செல்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!