வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (03/01/2018)

கடைசி தொடர்பு:07:40 (03/01/2018)

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா உட்பட 9 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்

அதன் தொடர்ச்சியாக இன்று ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு நடைபெற்றது. சோமாஸ் கந்தர் சிலையில் போதிய தங்கம் கலக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சிலையில் தங்கத்தின் அளவுகுறித்த ஆய்வு நடத்தினர்.

சோமாஸ் கந்தர் சிலை, காஞ்சிபுரம்

ஆய்வு முடிந்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி வீரமணி, “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை செய்தார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளை பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய சோமாஸ் கந்தர் சிலையிலும் எள்ளளவும் இல்லை. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஸ்தபதி முத்தையா சோமாஸ் கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். இந்தப் பரிசோதனை மூலம் அவர் சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை மேற்கொண்டு சிலை தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். சிலை செய்வதற்காக எவ்வளவு தங்கம் வசூல் செய்யப்பட்டது என்பது புலன் விசாரணையில் முடிவில் தெரியவரும்” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க