புத்துணர்வு முகாமுக்கு குதூகலமாகப் புறப்பட்ட ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி!

ராமேஸ்வரம் திருக்கோயில் யானை ராமலட்சுமி, கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.

ராமேஸ்வரம் கோயில் யானை ராமலட்சுமி புத்துணர்வு முகாமிற்கு சென்றது

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமலட்சுமி என்ற 15 வயதுகொண்ட பெண் யானை உள்ளது. தொழிலதிபர் ராமசுப்பிரமணிய ராஜாவால் ராமலட்சுமி யானை ராமேஸ்வரம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 7 வயது குட்டியாக ராமேஸ்வரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட ராமலட்சுமி, ஏற்கெனவே கோயிலிலிருந்து வந்த பவானி என்ற யானையுடன் சேர்ந்து, கோயில் திருவிழாக்கள் மற்றும் சுவாமி வீதி உலாக்களில் பங்கேற்றுவந்தது.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்குச் சென்ற பவானி, ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்தது. இதனால் ராமலட்சுமி மட்டும் தனித்து விடப்பட்ட நிலையில், 2014-ம் ஆண்டு புத்துணர்வு முகாமுக்குச் சென்று திரும்பியது. இதனிடையே, ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் மாசித் திருவிழா இருந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்லவில்லை.

ஜனவரி 4-ம் தேதி, கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக, ராமலட்சுமி யானை செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திலிருந்து லாரியில் புறப்பட்டுச்சென்றது. ராமலட்சுமி புத்துணர்வு முகாமுக்குச் செல்வதை முன்னிட்டு, முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழியனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருக்கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் வேலுச்சாமி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் கஹாரின், கமலநாதன், கண்ணன், செல்லம் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும் பக்தர்களும் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!