ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ காந்தியின் அரசியலா!.. விமர்சகர்கள் சொல்வது என்ன? | Different perspectives on Rajini's Spritual politics

வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (03/01/2018)

கடைசி தொடர்பு:10:49 (03/01/2018)

ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ காந்தியின் அரசியலா!.. விமர்சகர்கள் சொல்வது என்ன?

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள ஆன்மிக அரசியல் குறித்துதான் கடந்த இரண்டு நாள்களாக தமிழகம் முழுவதும் அரசியல் விவாதங்களும் பகடிவசனங்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

அரசியலுக்கு வருவதாக நீண்ட காலம் சொல்லிக்கொண்டே இருந்த நடிகர் ரஜினிகாந்த், கமலின் அரசியல்பிரவேசத்துக்குப் பிறகு திடீரென அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கடந்த 31-ம் தேதியன்று ரசிகர்கள் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், தன்னுடைய கொள்கை இன்னதெனத் தெளிவாகக் கூறாதபோதும், ஆன்மிக அரசியல் செய்யப்போவதாகக் குறிப்பிட்டார். அவர் அதுகுறித்து தெளிவாகக் கூறாதநிலையில், அரசியல் அமைப்புகள் ஒவ்வொன்றும் அவரவர் நோக்கில் அதை வியாக்கியானம் செய்தன. 

சங் பரிவாரின் கருத்தாளர்களில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியலை உச்சிமோந்து வரவேற்றதுடன், மோடியின் அரசியலுக்கு இயைபானதாகவே ரஜினியின் அரசியல் இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார். பா.ஜ.கவும் இந்துத்துவ அமைப்புகளும் ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பதை வரவேற்றுள்ளன. 

மாற்றுத் தரப்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியோ, ”எங்களைப் போன்றவர்கள், அரசியலில் மிகப்பெரிய அளவுக்கு வரக்கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும், பகுத்தறிவு அடிப்படையில், பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு,  தீண்டாமை ஒழிப்பை மையப்படுத்துவதாக இருந்தால், நிச்சயமாக அதை வரவேற்கக்கூடிய நிலையில், தெளிவாக கருத்துகளைக் கூறுவோம். அதேநேரத்தில், ஆன்மிக அரசியல் என்று அவர்கள் சொல்வது இருக்கிறதே, அரசியலையும், ஆன்மிகத்தையும் சம்பந்தப்படுத்தக்கூடாது. இது முற்றிலும் அவருடைய குழப்பத்தைக் காட்டுகிறதே தவிர, வேறொன்றுமில்லை” என்று கருத்துத் தெரிவித்தார். 

இந்துமதம் சார்ந்த சென்னை ராமகிருஷ்ண மடத்துக்கு ரஜினிகாந்த் சென்று அங்குள்ள மட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். வெவ்வேறு மத அமைப்புகளைச் சார்ந்தவர்களை அடுத்து அவர் சந்திப்பாரா என்பது கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கையில், இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் பங்கேற்கும் முன்னர், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டில் குவிந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆன்மிக அரசியல் பற்றிக் கேட்க, “ நேர்மையான அறவழியிலான சாதி, மதச்சார்பற்ற அரசியல்தான் ஆன்மிக அரசியல்” என்று விளக்கம் அளித்தார். 

விசிக தலைவர் தொல்.திருமாவளவனோ,” ரஜினி, தன்னுடைய அரசியல் என்பது ‘சாதி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியலாக’ இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். இதிலிருந்து அவர் பொதுமக்களுக்கு உணர்த்த விரும்புவது என்னவென்றால், சாதியவாதிகளோடு-மதவாதிகளோடு கைகோக்கப் போவதில்லை என்பதையும், அதே வேளையில் மதவாதத்தை எதிர்க்கும் இடதுசாரி, முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேரப்போவதில்லை என்றும் தெளிவுப்படுத்த முயற்சிக்கிறார். அதாவது, ஆன்மிகவாதம் வேறு மதவாதம் வேறு என்பதை வேறுபடுத்திக்காட்ட அவர் முயற்சிக்கிறார் என்று தெரிகிறது. குறிப்பாக, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் மதவாத அரசியலுக்குத் துணைப் போகமாட்டேன் என்பதை அவர் உணர்த்துவதாகத் தெரியவருகிறது” என்று ரஜினி பற்றிய தன் அறிக்கையில் குறிப்பிட்டார். 

ஆனாலும், ஆன்மிக அரசியல் என்பதுகுறித்து மதவாத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு அமைப்பினரும் கொள்கையாளர்களும் பகடியாகவும் கேள்வி எழுப்பியும் கருத்துகளை வெளியிட்டுவருகின்றனர். சாதி, மதச்சார்பற்ற அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பே இல்லை என்றும் சாதி-மதச்சார்புக்கும் ஆன்மிகத்துக்கும் இடையில்தான் அதிகப் பிணைப்பு இருக்கிறது என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதேவேளையில், விசிக தலைவர் கூறுவதற்கு மாறுபட்டவகையில், ரஜினியின் ஆன்மிகமானது இந்துத்துவ மதவாதத்துடன் இணக்கமானது எனும் வாதமும் பலமாக வைக்கப்படுகிறது. 

தமிழ்த் திரைப்பட விமர்சகரும் அரசியல் எழுத்தாளருமான யமுனா ராஜேந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம். 

ரஜினி யமுனா ராஜேந்திரன்

அதற்கு, ” ஆன்மிக அரசியல் என்பதற்கு காந்தியை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள்; காந்தியின் அரசியலானது இந்து- முஸ்லிம் ஒற்றுமை குறித்து கறாராகவும் வலிமையாகவும் பேசியது. அரசோடு ஆன்மிகத்தை சேர்க்கக்கூடாது என்பதில் காந்தி கறாராக இருந்தார். அதற்கான அவசியமும் இல்லை. மனிதகுல வரலாற்றில் அரசு என்பது நவீன வடிவம். மதச்சார்பின்மையையும் அரசுடன் சேர்ந்தது என்பதே சரியான அரசியலாக இருக்கமுடியும். ஆனால், அரசியலோடு ஆன்மிகத்தைச் சேர்த்தால், அது அடிப்படைவாதம். இட்லரும் கொமோனியும் மோடியும் என வரிசையாகச் செய்துவருவது அடிப்படைவாதம்”என்கிறார் எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன். 


டிரெண்டிங் @ விகடன்