வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (04/01/2018)

கடைசி தொடர்பு:17:10 (04/01/2018)

கொள்ளையர்களைச் சிக்கவைத்த சிகரெட் துண்டுகள் - வேட்டையாடு... விளையாடு! (பகுதி -2)


            போலீஸ்

சென்னை  புறநகர் மணலி, திருவான்மியூர்  ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், ஸ்பெஷல் டீமோடு களத்தில் இறங்கியிருந்தாலும், தேடுதல் பணியில், 'பம்பர்' அடிக்கும் வாய்ப்பு, ஆந்திராவுக்குப் பயணமான தண்டையார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன்சந்திரா மற்றும் அவர் தலைமையிலான டீமுக்குத்தான்  கிடைத்தது. 'வெள்ளிக்கிழமை' கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீஸார்  உறுதியாக இருந்தாலும், குறைந்தபட்ச 'நவீனம்' என்பதுகூட  இல்லாமல் தமிழகக் காவல்துறை அப்போது மிகவும் பலகீனமாக இருந்தது. அப்போதைய ஒரே நவீனம் 'பேஜர்' தான். இடுப்பில் பெல்ட்டுடன் இணைக்கப்படும் அந்தப் பேஜர் கருவிகளில் பயன்பாடுக்கும், கொடுத்த விலைக்கும் ஏற்றது போல்  சிங்கிள், டபுள் மற்றும் ட்ரிபுள் லைன் கனெக்‌ஷன்கள் இருக்கும். ஒரே நேரத்தில் மூன்றுபேர் மெசேஜ் அனுப்பினாலும் படிக்க வசதியாக வந்ததுதான்  ட்ரிபுள் லைன்  பேஜர். அந்த பேஜரைத்தான் போலீசாருக்கு உயரதிகாரிகள் கொடுத்திருந்தனர். "எங்களை யாராவது தொடர்புகொண்டால் பேஜரில் லைட் எரியக் கூடாது,  எரிந்தாலும் அது, பளப்பளா என்று மினுக்கக் கூடாது,  மினுக்கினாலும்  'பீப்' ஒலி, வெளியில்  வரக்கூடாது... அது மாதிரி கொஞ்சம் ரெடி செய்து கொடுங்கள் சார்" என்று தங்களுக்கு ஏற்றார்போல் கணினி வல்லுநர்களிடம் பேசி,  பேஜர் கருவிகளை போலீஸார் வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டனர். இதுவே மிகப்பெரிய வசதியாக அவர்களுக்கு இருந்தது. இப்படி, குறைவான வசதிகளை மட்டும் கையில் வைத்துக்கொண்டுதான் டெக்னாலஜி அதிகம் கொண்ட ஆந்திராவுக்குள் நுழைந்தது, தமிழகப் போலீஸ்.


                        நவீன்சந்திராநாகேஷ், கே.ஆர்.விட்டல்ராமன் (ஓய்வு அதிகாரிகள்)

 'ஆபரேஷன் ஆந்திரா' பற்றி கூடுதல் துணை கமிஷனர் (ஓய்வு) கே.ஆர்.விட்டல்ராமனிடம் பேசினேன். பணி ஓய்வுக்குப்பின் தற்போது பெங்களூருவில் வசிக்கிறார் விட்டல்ராமன். மார்கழிக் குளிர், சென்னையைவிட பெங்களூருவில் அதிகம் என்றாலும் குரலில் எந்த நடுக்கமும் இல்லாமல் அதே காக்கி கம்பீரத்துடன் பேசினார். "அப்போ, சென்னை போலீஸ் கமிஷனரா விஜயகுமார் சாரும், இணை கமிஷனரா சைலேந்திர பாபு சாரும் இருந்தாங்க. வெரிகுட் ஆபீசர்ஸ். நாங்க கேட்ட அத்தனை உதவிகளையும் கொஞ்சமும் தாமதம் செய்யாமல் செய்து கொடுத்தார்கள். அவர்கள் அப்படி உதவியதால்தான் எங்களால் அதை சக்ஸஸ் பண்ண முடிந்தது. நான் வெறும் சூபர்வைசிங்தான் செய்தேன். டீம் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் ஸ்பெஷல் டீமில் இருந்த போலீஸார்தான் இதை அருமையாகச் செய்து முடித்தார்கள். கொள்ளையர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கத்தான் கொஞ்சம் தாமதம் ஆனது. அது தெரிந்ததும் டீம் ஆந்திராவுக்குப் போனது. ஆந்திராவுக்குப் போனால் எங்கு தங்குவது, யாரைப் பார்ப்பது, ஆந்திரப் போலீஸ் உதவியை எப்படிப் பெறுவது என்ற அனைத்து விஷயங்களையும், உயர் அதிகாரிகள், எங்களுக்குத் தெளிவாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இவ்வளவும் செய்து கொடுத்தபின், கொள்ளையர்களைப்  பிடிக்காமல் வருவோமா? உழைத்த  அனைவருக்கும் நன்றி, பிரதர்" என்றார்.

 கலவரப் பகுதியில்   போலீசார்


உதவி கமிஷனராக இருந்து பணி ஓய்வு பெற்றுள்ள அன்றைய போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன்சந்திரா நாகேஷை, சந்தித்துப் பேசினேன். "ஏ... அப்பப்பா...எவ்வளவு அருமையான வழக்கு அது. அதை மறக்கமுடியுமா? இதுபோன்ற ஆபரேஷன்களை  என்னைப் போன்றவர்களின் நினைவுக்கு திரும்பக் கொண்டு வந்ததே ஓய்வு காலத்தில் மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க நாங்கள் ஆந்திராவுக்குப் போகவேண்டிய சூழ்நிலை எங்களைத் தேடி வந்தது. அதாவது, அக்கம் பக்கத்து போலீஸ் குவார்ட்டர்ஸ்களில் நடந்த கொள்ளைகள்குறித்து, நான் மிகவும் வேதனைப்பட்டுப் பேசிக் கொண்டிருப்பேன். அப்போது,  குறிப்பிட்ட ஒரு வெள்ளிக்கிழமை நாளில், நான் இன்ஸ்பெக்டராக இருந்த தண்டையார் பேட்டை  போலீஸ் குடியிருப்பிலேயே, கொள்ளையர்கள் கைவரிசை காட்டி விட்டனர்.  நான் உண்மையிலேயே பதறிப் போனேன்.  கொள்ளை நடந்த இடத்தை ஒருமுறைக்கு பலமுறை நேரில் போய்ப் பார்த்து ஆய்வு செய்தேன்.  பீல்டு வொர்க் செய்வதுதான் எப்போதுமே சிறந்தது. அப்போதுதான், 'பீல்டுக்குப் போய்ப் பார்த்தீர்களா?' என்று அதிகாரிகள் கேட்டால், பார்த்ததைச் சொல்லமுடியும். அதன்மூலம் அவர்களுக்கும் குற்றம் தொடர்பான சில யோசனைகள் உதிக்கும், நமக்கும்  அதேபோல் வாய்ப்புகள் கிடைக்கும்.  அந்த அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த வீடுகளில்  கொள்ளையர்கள் விட்டுச் சென்ற சில சிகரெட் துண்டுகள் கிடந்தன. ஆந்திராவில் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருக்கும் 'பாஷன் ஷோ' சிகரெட்டு துண்டுகள்தான் அவை என்பது தெரிந்தது. அந்த சிகரெட் துண்டுகள்தான், இந்தவழக்கில் முக்கியமான துருப்புச் சீட்டாக அமைந்தது. சிகரெட் துண்டுகளின் பின்னணி குறித்து, கமிஷனர், இணை கமிஷனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்தேன். அதன் பின்னர்தான் மற்ற இடங்களுக்குப் போயிருந்த போலீஸ் டீமை, அவர்கள் திரும்ப அழைத்தனர். கொள்ளையர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது, சிகரெட் துண்டுகள் மூலம் உறுதியானது. 
கொள்ளையர்களைப் பிடிக்க ஆந்திராவின் விஜயவாடா பகுதிக்குப்போய் சில நாள்கள் தங்கியிருந்து, அவர்கள் பற்றிய தகவலைச் சேகரித்தோம். சென்னை போலீஸ் உயரதிகாரிகள் ஆந்திர போலீஸ் உயரதிகாரிகளிடம் பேசி, ஆபரேஷனுக்கு நேர்த்தியாக பிளான் போட்டுக் கொடுத்தனர்.

                                              ஜி.லோகநாதனை பாராட்டும்  இணை கமிஷனர் தினகர் (வேறொரு தருணம்)

ஆந்திர மாநில போலீஸ் இன்ஃபார்மர், உள்ளூர் ஸ்பெஷல் போலீஸ் டீம் எங்களுக்கு உதவினாலும் நாங்களும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே செயல்பட்டோம். முதல் இரண்டு நாள்கள், கொள்ளைக் கும்பலை தூர இருந்தபடியே கண்காணித்தோம். கொள்ளையர்களின் ஆள்பலம், ஆயுதபலம் அனைத்தையும் 'ஸ்டடி' செய்தோம். சூழ்நிலை எங்களுக்குச் சாதகமாக அமைந்த பின்னரே செயலில் இறங்கினோம். ஒரே அமுக்காக, அவர்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு சென்னை திரும்பினோம். எங்கள் மொத்த டீமையும் கமிஷனர், ஜே.சி., டி.சி. அனைத்து அதிகாரிகளும் பாராட்டினார்கள். நான் எங்கள் ஸ்பெஷல் டீமைப் பாராட்டினேன். இந்த வழக்கில் ஒரு மனநிறைவு இருந்தது. கொள்ளைபோன அத்தனை நகைகளும் மீட்கப்பட்டன. கொள்ளையர்களுக்கும் சட்டரீதியாக தண்டனை வாங்கிக் கொடுத்தோம்" என்றார் அவர். இந்த 'ஆபரேஷன் ஆந்திரா'வில் துணை கமிஷனர் ஏ.ஜி. மௌர்யா, உதவி கமிஷனர் கே.ஆர்.விட்டல்ராமன் ஆகியோரை கமிஷனர் விஜயகுமாரும், இணை கமிஷனர் சைலேந்திர பாபுவும் இயக்கினர். உதவி கமிஷனர் விட்டல்ராமன், இன்ஸ்பெக்டர் நவீன்சந்திரா நாகேஷ் தலைமையிலான ஸ்பெஷல் டீமை துணை கமிஷனர் மௌர்யா  இயக்கினார். ஸ்பெஷல் டீமில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், பால்ராஜ் (இவர்கள் தற்போது சீனியர் இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர்), முதல்நிலைக் காவலர்கள் ஜி.லோகநாதன், பரீன்செல்வம், தலைமைக் காவலர்கள் கோபால், கன்னையன், ரமேஷ் ஆகியோர் இருந்தனர். (இந்த டீமில் ரமேஷ் தவிர மற்றவர்கள் பணி ஓய்வு பெற்று விட்டனர்) ஸ்பெஷல் டீமில் இருந்த ஜி.லோகநாதன், 'ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்த அந்த திக் -திக் நிமிடங்களை இப்போது நினைத்தாலும்' சிலிர்த்து விடுகிறது என்றவர்  சொன்ன விஷயம் ...
(தொடரும்)


டிரெண்டிங் @ விகடன்