பாபா முத்திரையிலிருந்து தாமரை நீக்கம்- ரஜினி அதிரடி

பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாக ரஜினியின் ஆன்மிக அரசியல் கட்சி உருவெடுக்கும் என்ற பேச்சு எழுந்ததையடுத்து, பாபா முத்திரையில் இருந்த தாமரை மலர் படத்தை நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக நீக்கியுள்ளார். 

ரஜினியின் புதிய பாபா முத்திரை

ரஜினியின் அரசியல் கட்சி சின்னமாக பாபா முத்திரை தேர்வுசெய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆள்காட்டிவிரலையும் சுண்டுவிரைலையும் உயர்த்தி, மற்ற விரல்களை மடக்கி வைத்திருப்பதே பாபா முத்திரை ஆகும். ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக ரஜினிகாந்த் கூறியிருக்கும் நிலையில், பாபா சின்னத்தைப் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாபா முத்திரையில் தாமரை மலர் இடம் பெற்றிருந்ததே இதற்குக் காரணம். பாரதிய ஜனதா கட்சியின் மறைமுக ஆசியினால்தான், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவதாக சொல்லப்படும் நிலையில், பாபா சின்னத்தில் தாமரை இடம் பெற்றிருப்பதும் விமர்சனத்திற்குள்ளானது.

இதையடுத்து, பாபா முத்திரையில் இருந்த தாமரையை நடிகர் ரஜினிகாந்த் நீக்கியுள்ளார். தற்போது, கை மட்டுமே அதில் காணப்படுகிறது. அதன் கீழ் உண்மை, உழைப்பு, உயர்வு என்கிற வாசகங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. தேர்தல் நேரத்தில் பாபா முத்திரையில் தாமரை இடம்பெற்றால், தன் கட்சியின் சின்னத்துக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று ஆலோசித்தே ரஜினிகாந்த் இந்த முடிவை எடுத்துள்ளார். 

ரஜினிகாந்த், நேற்று தன் ட்விட்டர் பக்ககத்தில் வெளியிட்ட வீடியோவில் பாபா சின்னம் இடம்பெற்றிருந்தது. அதில், தாமரைக்குப் பதிலாக பாபா முத்திரையைச் சுற்றி பாம்பு உருவம் இடம்பெற்றிருந்தது. கொல்கத்தா ராமகிருஷ்ணா மடத்தின் சின்னத்தில், சூரியன் உதிக்கும் பின்னணியில் குளம், தாமரை மற்றும் அன்னப்பறவை இடம்பெற்றிருக்கும். அதைச் சுற்றி பாம்பு படமெடுத்து நிற்பது போன்று அந்தச் சின்னம் காணப்படும். அந்தச் சின்னத்தைப் போலவே, நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரையை மாற்றியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த்,  சென்னை ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, ஆன்மிகப் பெரியவர்களைச் சந்தித்து உரையாடியதும் குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!