`முதலில் குதிக்கட்டும்; அப்புறம் அரசியல் நடத்தட்டும்' - ரஜினிக்கு எதிராகச் சீறும் தமிழிசை

"ரஜினியின் ஆன்மிக அரசியல் புதிய விஷயமில்லை. ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் இருக்கிற விஷயம்தான். அது, தமிழ் மொழியில் இருக்கிறது. அது, ஆன்மிகத் தமிழாக இருக்கிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவனடியார்களும் பாடல்கள் மூலமாகவும் பாமாலைகள் மூலமாகவும், ஆன்மிகத்தை தமிழைக்கொண்டு வளர்த்தார்கள். ஆகவே, ரஜினி சொல்கிற விஷயம் புதிது இல்லை. அவர் சொல்கிற ஆன்மிக அரசியலைத்தான் பா.ஜ.க-வும் தனது முதன்மைக் கொள்கையாக வைத்திருக்கிறது"என்று ரஜினியின் ஆன்மிக அரசியலை அட்டாக் செய்து பேட்டி அளித்தார் தமிழிசை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் இன்று வந்தார். அவருக்கு, புதுக்கோட்டை நகர் எல்லையான பாலன் நகரில், கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, புதுக்கோட்டையிலும் சளைக்காமல் பேட்டி அளித்து அசத்தினார். அப்போது, ரஜினியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். "ரஜினி இன்னும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கவில்லை. முதலில் குதிக்கட்டும்; மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து அரசியல் நடத்தட்டும்.

அதேபோல, தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், அதன் பின்னணியில்  பா.ஜ.க இருக்கிறது என்று விமர்சனங்கள் வைப்பது ஒரு வேளையாகவே ஆகிவிட்டது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. இதுவும் தவறான ஒரு கண்ணோட்டம்தான்" என்றவரிடம், ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜ.க பெற்ற மோசமான தோல்வி குறித்துக் கேட்கப்பட்டது. "அந்தத் தேர்தலில் பா.ஜ.க சிறிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. முன்பெல்லாம் தேர்தல் நடப்பதற்கு முன்புதான் பணம் கொடுப்பார்கள். இப்போது, தேர்தல் முடிந்த பிறகும் பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் விதி என்பதே, தேர்தல் நிதி என்றாகிவிட்டது தமிழ்நாட்டில்" என்று முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டாமல் பேசினார் தமிழிசை.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!