திருச்செந்தூர் முருகன் கோயிலைப் புதிய பொலிவுடன் மாற்ற நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜு | Thiruchendur temple will be renovated shortly assures Minister kadambur raju

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (03/01/2018)

கடைசி தொடர்பு:15:31 (03/01/2018)

திருச்செந்தூர் முருகன் கோயிலைப் புதிய பொலிவுடன் மாற்ற நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜு

”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான  சுற்றுப்பிராகாரத்துக்கு மாற்றாக சுற்றுப்பிராகாரம், கல் மண்டபமாக  கட்டப்படும். அத்துடன் இக்கோயில் புதுப்பொலிவு பெறும்.” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Minister kadamboor raju inspection in trichendur

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சுற்றுப்பிராகாரம் இடிக்கப்பட்ட பகுதிகள், கலையரங்கப்பகுதி, அகற்றப்பட்ட கடைகள், புதிய கடைகள் கட்டப்படுவதற்கான அனுகிரக மண்டபம், ஜெயந்திநாதர் விடுதி  வளாகம், நாழிக்கிணறு ஆகிய பகுதிகளை ஆய்வுசெய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ சுற்றுப்பிராகார மண்டபம் சேதமடைந்து காணப்பட்டதால் அதை அப்புறப்படுத்திவிட்டு புதிய மண்டபம் கட்ட வேண்டும் என பக்தர்களும், சமூக அமைப்புகளும் ஏற்கெனவே கோரிக்கை வைத்தனர். அதன்படி, இந்த மண்டபத்தை இடித்து புதிய மண்டபம் கட்டப்பட வேண்டும்  என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்குள் எதிர்பாராமல் வள்ளி குகைக்கு எதிர்புறமுள்ள மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மோர் விற்பனை செய்துகொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Minister kadamboor raju inspection in trichendur

தொடர் நடவடிக்கையாக பிராகாரத்தின் தூண், கட்டட தன்மையை ஆராய்ந்து இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் கட்டட இடுபாடு வேலையைக் கருத்தில் கொண்டுதான் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்றாக வேறு இடத்தில் கடைகளை  மாற்றித்தர வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கையால் கடைகள் கட்டப்படுவதற்காக, ஜெயந்திநாதர் விடுதி, நாழிக்கிணறு, அனுக்கிரக மண்டபம் ஆகிய பகுதிகளை வியாபாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். 

Minister giving rs.1 laksh amount to perchiammal childrens

புதியதாக அமைக்கப்பட உள்ள சுற்றுப்பிராகாரம் கல் மண்டபமாகத்தான்  கட்டப்பட வேண்டும். இதற்காக உபயதாரர்கள் தயாராக உள்ளனர். இதற்கான திட்ட மதிப்பீடு இன்னும் தயாராகவில்லை. விரைவில் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் தலைமையிலான குழு திட்டமதிப்பீட்டைத் தயார் செய்து கல் மண்டபப் பணிகள் தொடங்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு அடுத்தபடியான நிலையில் உள்ள இந்தக் கோயில் புதிய பொலிவுடன் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

பின்னர், பிராகார மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானபோது உயிரிழந்த பேச்சியம்மாளின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியதோடு, தனது சொந்த நிதி ரூ.1 லட்சத்தை மகன், மகளிடம் வழங்கினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க