வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (03/01/2018)

கடைசி தொடர்பு:10:32 (04/01/2018)

‘சென்னை ஸ்கூல் பஸ் டிரைவர், ஹெலிகாப்டர் அதிபரானார்!’ - சினிமாவை மிஞ்சிய சதுரங்க வேட்டை

நிலமோசடி செய்த சென்னை தொழிலதிபர் வெங்கடரமணன்

சென்னையில் நிலம் வாங்கித்தருவதாக 40 கோடி ரூபாய் மோசடி செய்தவரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்துள்ளனர். சாதாரண ஸ்கூல் பஸ் டிரைவராக இருந்தவர், போலீஸிடம் சிக்கும்போது சொந்தமாக ஹெலிகாப்டர், செயற்கைக்கோள் போன், வடமாநிலங்களில் கம்பெனி என வசதியுள்ள தொழிலதிபராக வலம் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன். 57 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்தப் பகுதியில் உள்ள தனியார் ஸ்கூல் ஒன்றில் பஸ் டிரைவராகப் பணியாற்றினார். இவரது மனைவி, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வெங்கடரமணனின் பெற்றோரும் ஆசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். வெங்கடரமணனுக்கு மூன்று குழந்தைகள். 

ஸ்கூல் பஸ் டிரைவர் வேலையோடு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் வெங்கடரமணன் கால்பதித்தார். அதில், வருமானம் அதிகரித்தது.  அதனால், ஸ்கூல் பஸ் டிரைவர் வேலையை உதறித்தள்ளினார், முழுநேரம் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகம், சொகுசு கார்கள் என பந்தாவாக வலம் வந்தார்.

இந்தச் சமயத்தில், பிரதீப்குமார் என்பவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 ஏக்கர் நிலம் வாங்கித்தரும்படி வெங்கடரமணனை அணுகியுள்ளார். அதில், 1.70 கோடி ரூபாயை ஏமாற்றியதாக பிரதீப்குமார், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 
இதற்கிடையில், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கே.ஆர்.வி. ப்ராபர்ட்டீஸ் சி.இ.ஓ குமார், சென்னையைச் சேர்ந்த கிரண் வர்கீஸ் தாமஸ் ஆகியோரும் வெங்கடரமணன் மீது மோசடிப் புகார் கொடுத்தனர். மூன்று புகார்கள் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார் தேடுவதையறிந்த வெங்கடரமணன், வடமாநிலத்துக்குத் தப்பிஓடிவிட்டார். அவரது கூட்டாளிகள் முத்துநாராயணன், கமலேஷ், சஞ்சய் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், மூன்று ஆண்டுகளாக வெங்கடரமணன் வடமாநிலங்களில் தலைமறைவாகவே இருந்துவந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கிக் குண்டுபாய்ந்து பலியானார். இதனால், வடமாநிலங்களில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சென்னை போலீஸார் கூடுதல் கவனம்செலுத்திவருகின்றனர். வெங்கடரமணன், மஹாராஷ்டிராவில் தலைமறைவாக இருக்கும் தகவல், உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டிக்குக் கிடைத்ததும் அங்கு செல்ல முடிவுசெய்தனர். உடனடியாக, சில நாள்களுக்கு முன்பு முத்துவேல்பாண்டி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், ஆனந்தபாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கமல்மோகன், யோகேஷ்வரன் மற்றும் போலீஸார் கஜேந்திரன், செந்தில்குமார் ஆகியோர் மஹாராஷ்டிராவுக்குச் சென்றனர். அங்கு வெங்கடரமணன், ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார்  என்ற தகவல் கிடைத்ததும், அந்த இடத்துக்கு போலீஸார் சென்றனர். 

 தொழிலதிபர் வெங்கடரமணன் பயன்படுத்தி ஹெலிகாப்டர்


உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீஸார், வெங்கடரமணனைப் பொறிவைத்து மடக்கிப்பிடித்தனர். பிறகு, சென்னைக்கு அழைத்துவந்தனர். வெங்கடரமணன் மீது 40 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. அதில் முதல் குற்றவாளியான வெங்கடரமணனை, துரிதமாகச் செயல்பட்டு பிடித்துவந்துள்ளனர். அவர்களை சென்னை போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

 

 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “வெங்கடரமணன், சென்னையில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தியபோது மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் பணியாற்றியுள்ளார். போலீஸில் வெங்கடரமணன் மீது நிலமோசடி புகார் கொடுக்கப்பட்டவுடன்,   வெங்கடரமணன் மஹாராஷ்ராவுக்குச் சென்றுள்ளார். அங்கு, அந்தப் பெண் உதவியுடன் கம்பெனியை நடத்திவந்துள்ளார். மேலும், மும்பையில் இந்திரா ஏர் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஹெலிகாப்டரை வாடகைக்கு விட்டுள்ளார். இதற்காக, 6 கோடி ரூபாய் மதிப்பில் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். போலீஸ் தேடுவதையறிந்ததும் மும்பை, மஹாராஷ்டிரா என வடமாநிலங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். அதற்கு, ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியிருக்கிறார். பல சொகுசு கார்களும் அவரிடம் இருந்துள்ளன. தலைமறைவு வாழ்க்கையால் அந்த கார்களைச் சிலர் கைப்பற்றியுள்ளனர்.

போலீஸிடம் சிக்காமலிருக்க, செயற்கைக்கோள் போனை வெங்கடரமணன் பயன்படுத்திவந்துள்ளார். இதனால், அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது. தற்போது, வெங்கடரமணன் குறித்த தகவல் கிடைத்ததும், அவர் மஹாராஷ்டிராவில் நடத்திவரும் நிறுவனத்துக்குச் சென்றோம். வெங்கடரமணனின் புகைப்படத்தை அங்கு காட்டியதும், அங்குள்ளவர்கள் அடையாளம் காட்டினர்.

வெங்கடரமணனிடம் போலீஸார் விசாரித்தபோது, நான் ஏமாற்றியதாக என் மீது புகார் கொடுத்தவர்களுக்குப் பணம் கொடுத்துவிடுகிறேன். என்னை விட்டுவிடுங்கள். தற்போது சென்னையில் கோடிக்கணக்கில் எனக்குச் சொத்துகள் இருக்கின்றன. அதைக்கூட புகார் கொடுத்தவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். வெங்கடரமணனைக் கைதுசெய்ய, அவர் பயன்படுத்திய செயற்கைக்கோள் போனை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். தொடர்ந்து, அவரது சொத்துகுறித்த விவரங்களைச் சேகரித்துவருகின்றனர்.

தலைமறைவாக இருந்த வெங்கடரமணன், போலீஸுக்கு பயந்து சில மாதங்களாக ஹெலிகாப்டரைப் பயன்படுத்தாமல் இருந்ததால், அது பழுதடைந்துள்ளது. மேலும், ஹெலிகாப்டரை இயக்கும் பைலட் ஒருவரை வெங்டரமணன் வேலைக்குச் சேர்த்துள்ளார். அவருக்கு மாதச் சம்பளம், இரண்டரை லட்சம் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது, அந்த பைலட் மத்திய அமைச்சர் ஒருவரின் தூரத்து உறவினர் என்று தெரிவித்துள்ளார். அதுதொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரித்துவருகின்றனர். நிலமோசடிப் புகாரில் சிக்கிய வெங்கடரமணனின் வாழ்க்கை, ‘சதுரங்க வேட்டை’ சினிமாவின் நிஜம் போல இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது, நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, பிளாட் போட்டு அதிக லாபத்தைப் பெறலாம் என்று, புகார் கொடுத்தவர்களிடம் வெங்கடரமணன் கூறியிருக்கிறார். மேலும், வாங்கிக்கொடுத்த இடத்தை வேறு நபருக்கு விற்கும்போது, குறைந்த விலைக்குக் கொடுத்துள்ளார். அதிலும் லாபத்தை வெங்கடரமணன் பார்த்துள்ளார். லட்சக்கணக்கில் மோசடிசெய்து, ஆடம்பரமாக அவர் வாழ்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


டிரெண்டிங் @ விகடன்