வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (03/01/2018)

ஒருவர் இரண்டு வார்டுகளில் சேர்ப்பு! மறுசீரமைப்பில் நடக்கும் தில்லாலங்கடி வேலை

ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டுகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டதால் கொதிப்படைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

              

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தற்போது மீண்டும் அதே 21 வார்டுகள் அமைக்கப்பட்டு 33,899 பேர் மறுசீரமைப்பு செய்து, ஒரு வார்டுக்கு 1,614 பேர் வீதம் இருப்பதுபோல சீரமைப்பு செய்யட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஒரு வார்டிலிருந்து இரண்டு, மூன்றாவது வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்களிடையே அதிக குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதால் கொதிப்படைந்துள்ளனர். இதுபற்றி விவரமறிந்த 10 வார்டு பொதுமக்கள் தங்களை 8 வது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பாகப் பஸ் ஸ்டாண்டு ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

சாலைமறியலில் ஈடுபட்ட சந்துரு என்பவர் பேசுகையில், ``வார்டு மறுசீரமைப்பு குறித்த அறிக்கை தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், எந்த நாளிதழ்களிலும் செய்தி வந்தது மாதிரி தெரியவில்லை. ஜெயங்கொண்டம் நகராட்சி மறுவரையறை வரைவு குறித்த கருத்து தெரிவிக்க ஜனவரி 2-ம் தேதி கடைசிநாள் எனச் சொல்கிறார்கள். ஆனால், டிசம்பர் 30-ம்தேதிதான் தினசரி நாளிதழில்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 31-ம்தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும், ஜனவரி 1-ம்தேதி அரசு விடுமுறை தினமாகவும் இருந்ததால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க சுமார் 15 தினங்களுக்கு முன்பாகவாது தெரிவித்திருக்க வேண்டும். நேற்றுடன் கடைசிநாள் என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சொல்கிறார்கள். விடுமுறை நாள்கள் அதிகமாக இருந்ததால் கால அவகாசம் கொடுக்க வேண்டியதுதானே. அதைக் கொடுக்காமல் அவர்கள் செய்த தவற்றை மறைக்கப் பார்க்கிறார்கள் அதிகாரிகள்.

ஒருவார்டில் உள்ளவர்களை மீண்டும் அதே வார்டுகளில் சேர்க்க வேண்டும். 1,614 பேருக்கு மேல் இருப்பவர்களை வார்டிலிருந்து வெளியில் சேர்க்காமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். இவர்கள் ஏன் இந்தக் குழப்பத்தைச் செய்கிறார்கள் என்று எங்களுக்கு நன்கு தெரியும். உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதற்காகவே வார்டுகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களை அல்லோலப்படுத்துகிறார்கள். நாங்கள் நகராட்சியின் முன்பு மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டோம். எங்களுடைய  கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளுங்கள் எனக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டதின்பேரில் பொதுமக்களாகிய நாங்கள் கலைந்து சென்றோம்" என்றார். பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையமே பரபரப்பாகக் காணப்பட்டது.