வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:18:00 (03/01/2018)

`மகிழ்ச்சி அடையுங்க; போராடாதீங்க' - ஆளுநருக்காகப் பரிந்துபேசும் தமிழிசை

தமிழகம் முழுவதிலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் 49 பேரின் கூட்டத்தைக் கோட்டம்வாரியாக தமிழக பா.ஜ.க நடத்திவருகிறது. அந்த வகையில், இன்று திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தமிழிசை

அப்போது, “கடந்த ஆர்.கே.நகா் தொகுதி தேர்தலில், பா.ஜ.க பெரும் பின்னடைவை அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, நிதிமுறையால் வெல்லப்பட்டுவிட்டது. அதிக அளவில் பணம் மட்டுமே இந்தத் தேர்தலில் விளையாடி யுள்ளது. பல கட்சிகள் அந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஆனால், பா.ஜ.க மட்டும் பின்னடைந்துவிட்டதாகவும், அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை எனவும் ஆளாளுக்கு கருத்து சொல்கிறார்கள்; அதை நான் மறுக்கிறேன்.

நாங்கள், தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். தற்போது ஏற்பட்டிருப்பது, தற்காலிகப் பின்னடைவுதான். அடிப்படையில் மாற்றத்தை உண்டாக்கி வருவதற்கு முக்கியமான விஷயங்களை எடுத்துவருகிறோம். அவற்றை, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்துவோம். தோல்வி யாருக்கும் நிரந்தரமில்லை. தமிழக பா.ஜ.க, தோல்வியிலிருந்து மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். மேலும், தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் பா.ஜ.க உள்ளதாகக் குற்றஞ்சாட்டுவது தொடர்கதையாகியுள்ளது. சமீபகாலமாக, அ.தி.மு.க-வின் பின்னணியில் பா.ஜ.க உள்ளது என்று கூறியவர்கள், ரஜினி வந்தவுடன் அவருக்குப் பின்னால் பா.ஜ.க உள்ளது என்று கூறினார்கள். அதைப்போலத்தான், தற்போது 2ஜி ஊழல் தீர்ப்பில் பா.ஜ.க உள்ளது என்றார்கள். இப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழிசை.

தமிழக ஆளுநர் திருச்சி வந்தபோது, அவரைக் கடுமையாக விமர்சித்து தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கக் கூடாது. இது ஒரு மோசமான நடைமுறை. உயர் பாதுகாப்பு மிகுந்த ஆளுநரை மிக மோசமான நடத்துவது என்பது தவறான முன்னுதாரணம். தஞ்சை வந்த ஆளுநர், 'தூய்மை இந்தியா திட்டம்' குறித்து ஆய்வுசெய்ததும், அவர்கள் மக்களைச் சந்தித்தபோது, காவிரிக்கு முயற்சி செய்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அவர், அவரது பணியைச் செய்கிறார். அதை விமர்சிப்பது என்பது மிக மோசமானது. அதைத்தான் தி.மு.க செய்கிறது.

ஆளுநர்கள் தேவையான போது களத்தில் இறங்கிப் பணிசெய்ய வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் அவை தேவைப்படவில்லை. தமிழகத்தில் தேவைப்படுகிறது. ஆளுநர் எந்த அடிப்படையில் அஸ்ஸாமில் பணியாற்றினாரோ, அதுபோலவே தமிழகத்திலும் பணியாற்றுகிறார். இதற்கு, மக்கள் மகிழ்ச்சி அடையனுமே தவிர, போராடக்கூடாது. சும்மா இல்லாமல், மக்களைத் தொடர்புகொள்கிறார் என்றால் மகிழ்ச்சிதானே. ஆளுநரின் பணியைப் பாராட்டினால் நல்லது. அவர், மக்களுக்கு நல்லது செய்தால் பாராட்ட வேண்டும் என்பது எனது கருத்து” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க