ஆவடி குமாருக்கு கல்தா கொடுத்தது ஏன் - பரபரப் பின்னணி

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா காலத்திலிருந்தே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவரான ஆவடிக்குமார் பெயர் இடம்பெறவில்லை. 

ஆவடிக்குமார்

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் கட்சியினர் தங்களின் கருத்துகளை எல்லாம் அ.தி.மு.க-வின் கருத்தாகப் பேசி வருவதாகப் புகார்கள் வந்தன. அதனால் அ.தி.மு.க அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சார்பாகக் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், `அ.தி.மு.க சார்பில் அனைத்து ஊடகங்களிலும் நடத்தப்படும் விவாதங்களில் பங்கேற்று கழகத்தின் கருத்துகளை எடுத்துக்கூற புதிய செய்தியாளர் குழு விரைவில் அறிவிக்கப்படும் எனக் கடந்த நவம்பர் 28-ம் தேதி அறிவித்து இருந்தோம். ஆனால், கழகத்தின் தோழமைக் கட்சியினர் போன்ற அடையாளங்களைக் கொண்டு சில ஊடகங்களில் கூறிவரும் கருத்துகள், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வக் கருத்துகள் அல்ல. அவர்களைக் கழகத்தின் சார்பான கருத்துகளைக் கூற யாரும் நியமிக்கவில்லை’ எனத் தெரிவித்து இருந்தனர். 

இதனால், தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க-வின் சார்பாக அதிகாரபூர்வ நபர்கள் இல்லாததால், பேசுவதற்கும் அ.தி.மு.க-வின் கருத்துகளைத் தெரிவிக்கவும் ஆட்களை அழைக்க முடியாத நிலைமை உருவானது. இந்த நிலையில், கட்சியின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அதிகாரபூர்வமான செய்தித் தொடர்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில், `அ.தி.மு.க-வின் கொள்கைகளையும் குறிக்கோளையும், கோட்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கோ.சமரசம், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், ஏ.எஸ்.மகேஸ்வரி, பாபு முருகவேல், நமது எம்.ஜி.ஆர் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தித் தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரும் அ.தி.மு.க சார்பாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவதற்கு தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லை என்பதையும் தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லீக் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்து கொள்வார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்’’ எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்தப் பட்டியலில், அ.தி.மு.க விவாதங்களில் அதிகமாகப் பங்கேற்பவரான ஆவடிகுமார் இடம்பெறவில்லை. அவரது பெயர் இடம்பெறாத விவகாரம் கட்சியினரிடமும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. கட்சியின் கொள்கைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறிவரும் அவருக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது, கட்சி நிர்வாகிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவரது பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகக் கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!