வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (03/01/2018)

கடைசி தொடர்பு:20:20 (03/01/2018)

`ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள்!' - ஜல்லிக்கட்டுக்காக ஒலித்த கலெக்டரின் குரல்

jallikatu

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று ஜல்லிக்கட்டு தொடர்பான முன்னேற்பாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது . இதில் வருவாய்துறை, கால்நடைத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, சுற்றுலாத்துறை, இந்து அறநிலையத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளின் உயர் அதிகாரிகளும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

'எவ்வாறு ஜல்லிக்கட்டை சிறந்த முறையில் நடத்த வேண்டும், காளைகளுக்கு, மாடுபிடி வீரர்களுக்கு மற்றும் பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது'  என்று ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும், கடந்த  ஆண்டு ஜல்லிக்கட்டில் என்னென்ன தேவை இருந்தது என்பதையும் அந்தச் சிக்கல்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்றார். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பாக, சுற்றுலாத்துறை அதிகாரி பாலமுருகனிடம் கேட்டறிந்ததோடு, 'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் இருந்தால் மட்டும் வரட்டும். நாம் அவர்களை அழைக்க வேண்டாம். நம் ஊர் மக்களுக்கு முன்னுரிமை கொடுப்போம்' என்று கூறினார்.

மேலும், ''ஜல்லிக்கட்டின் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். எந்த ஒரு சின்ன அசம்பாவிதமும் நடக்காமல், சிறந்த முறையில் ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்போம் என்று தெரிவித்த கலெக்டர், வரும் 14-ம் தேதி அவனியாபுரம்,15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூர்  என மதுரையில் கோலாகலமாக நடைபெறும் என்று ஜல்லிக்கட்டு தேதிகளை அறிவித்தார் .