34 நாள்களுக்குப் பிறகு அடையாளம் தெரிந்தது; தமிழக மீனவர்களின் உடல்கள்!

ஒகி புயலில் கடல் இறந்துபோன அடையாளம் தெரியாத மூன்று மீனவர்களின் உடல்கள் டி.என்.ஏ மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி ஒகி புயல் வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மீனவர்கள் பலர் இறந்தனர். பலர் கடலில் தத்தளித்தனர். அவர்களைக் காப்பாற்ற அரசுகள் வேகம் காட்டவில்லை. பின்னர் மாயமான மீனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படைக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், மீனவர்களின் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

அப்போது தேடியதில் சில அழுகிய நிலையில் மீனவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டன. புயலால் கடலில் இறந்துபோன மீனவர்களின் உடல்கள் கேரளாவில் பல்வேறு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்தன. அழுகிய நிலையில் உடல்கள் இருந்ததால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை. அதனால் அந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.என்.ஏ சோதனை மூலம் தமிழக மீனவர்களின் உடல்கள் உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப்பட்டு வருகின்றன. கேரள மீனவர்களின் உடல்களும் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டுவருகிறது.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன் துறையைச் சேர்ந்த வில்பிரட் என்பவரின் உடல் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதுபோல புதுக்கடையைச் சேர்ந்த அல்பின்  உடல் ஆலுவா மருத்துவமனையிலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் என்பவரின் உடல் கோழிக்கோடு அரசு மருத்துவமனையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மீனவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த மாதம் நவம்பர் 29-ம் தேதி ஒகி புயலால் கடலில் இறந்துபோன தமிழக மீனவர்கள் மூன்று பேரின் உடல்களை 34 நாள்களுக்குப் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!