வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (03/01/2018)

கடைசி தொடர்பு:16:27 (03/01/2018)

தினகரனுக்கு எதிராக நாளை டைம்பாம் வெடிக்கும்! - ரகசியத்தை உடைத்த ஹெச்.ராஜா

நாளைக்கு தினகரனுக்கு எதிராக டைம்பாம் ஒன்று வெடிக்கும். அது என்னவென்று நாளை வரை பொறுத்திருந்துப் பாருங்கள்" என்று ஹெச்.ராஜா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், தனியார் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவும் வந்தனர். ராஜா காரைக்குடி வழியாகத் தனது காரில் பயணித்து வந்தார். தமிழிசை திருச்சி மார்க்கமாகப் பயணித்து புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டுச் சென்றார். இதனிடையே, முன்னதாக, வந்துவிட்ட ஹெச்.ராஜா,அங்குள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, 'போகிற இடத்திலெல்லாம் எங்களிடம் அதாவது, பா.ஜ.க தலைவர்களிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றியே கேட்கப்படுகிறது. உங்களுக்குச் சொல்கிறேன். நாளைக்கு டி.டி.வி.தினகரனுக்கு எதிராக டைம்பாம் வெடிக்கும். அது என்னவென்று நாளை வரை பொறுத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள்" என்று ஒரே போடாகப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

அங்கிருந்தவர்கள் மத்தியில் நாளைக்கு அப்படி என்ன அரசியல் பரபரப்பு எழப்போகிறது என்று மண்டை காய்ந்துப்போனார்கள். இன்னும் சிலர், "இந்தமாதிரி அரசியல் அணுகுண்டுகளை எல்லாம்  வழக்கமாகத் தமிழிசைதானே கொளுத்திப் போடுவாங்க. இவரு எப்போதிலிருந்து இந்த வேலையைக் கையில் எடுத்தார்" என்று கேட்டார்கள்.

நாம் இந்த 'டைம்பாம்' விஷயம் குறித்து ஹெச்.ராஜாவையே தொடர்புகொண்டு பேசினோம். ``ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அதிர்ஷ்டசாலிகள். இந்தத் தேர்தலில் வீட்டுக்கு வீடு குக்கர் வந்தது. இனியும் ஃப்ரிட்ஜ், வாசிங்மெஷின் எல்லாம் வரும்" என்று பூடகமாகப் பேசினார். "உங்களுக்குப் புரியலையா. ஆர்.கே.நகருக்கு இன்னொரு இடைத்தேர்தல் வரலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது. எப்படின்னா, நாளைக்கு டி.டி.வி.தினகரன் மீதான 28 கோடி ரூபாய் வழக்கு ஒன்று தீர்ப்பு வருகிறது. ஒருவேளை அதில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் மீண்டும் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும்தானே. அதைத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்படி  சொன்னேன்" என்றார்.