ஏழைப் பெண்களின் கனவுகளை அழித்து வருகிறது நீட்! மத்திய அரசுக்கு எதிராக வெடித்த மார்க்சிஸ்ட் | NEET exam destroys poor women dreams, says Communist party

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (03/01/2018)

ஏழைப் பெண்களின் கனவுகளை அழித்து வருகிறது நீட்! மத்திய அரசுக்கு எதிராக வெடித்த மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகச் சமூக நீதிப் போராளி சாவுத்ரிபாய் பூலேவின் பிறந்த தின கொண்டாட்டம் மற்றும் தலித் பெண்களுக்கான கல்வி மறுக்கப்படும் விதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வை கண்டித்தும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் குழந்தைவேல், ``சாவித்ரிபாய் பூலே மஹாராஸ்ட்ரா மாநிலம் சத்தாராவில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ம் ஆண்டு பிறந்தார். 9 வயதில் ஜோதிராவ் பூலே என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஜோதிராவ் பூலே பிற்காலத்தில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்தார். சாதி மதங்களுக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வியை வலியுறுத்தியும் போராடி நடத்தி வந்தார்.

ஜோதிராவ் பூலேவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சாவித்ரிபாய் பூலே முற்போக்கு தம்பதியினராக வாழ்ந்தார்கள். பிறகு, தன் கணவரிடம் சாவித்ரிபாய் கல்வி கற்று 1848-ல் புனேயில் பெண்களுக்கான பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். இதுவே அக்காலத்தில் பெண்களுக்காக முதன்முதலாகத் தொடங்கப்பட்ட பள்ளி. அதன் மூலம் தலித் பெண்களுக்கும் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கும் கல்வியைப் புகட்டினார். அந்தச் சமூகப் போராளியின் பிறந்த தினத்தை இந்தியா முழுவதும் குறிப்பாகப் பெண்கள் இன்று கொண்டாடப்பட வேண்டிய தினம்.

அனைவருக்கும் கல்வி சமமாக வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு கல்வியை ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எட்டாக்கனியாக ஆக்கும் விதமாக நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழைப் பெண்களின் கனவுகளை அழித்து வருகிறது. இன்றளவும் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெற முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால், அடியோடு நீட் தேர்வை நீக்க வேண்டும்'' என்று போராட்டம் நடத்தினார்கள்.


[X] Close

[X] Close