தாமரையைக் கிள்ளிவிட்ட ரஜினி! ஆரம்ப ஆட்டமாடிய தமிழிசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சின்னமான பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பல்வேறு விதமான அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ரஜினியின் அந்தச் செயல் பாரதிய ஜனதா கட்சியினரை அதிலும் குறிப்பாக, தமிழிசை சௌந்தரராஜனைக் கடுப்பேற்றியிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை பத்திரிகையாளர்கள் மத்தியில், ரஜினியை மிகக் கடுமையாகத் தமிழிசை விமர்சித்துப் பேசியிருக்கிறார். இது றித்த பின்னணித் தகவல்களுக்குச் செல்வதற்கு முன்பாக, திருச்சி விமான நிலையத்திலும் புதுக்கோட்டை பாலன் நகரிலும் அட்சரம் பிசகாமல் தமிழிசை பேசியதை முதலில் பார்த்துவிடுவோம்.

``ரஜினியின் ஆன்மிக அரசியல் புதிய விஷயமில்லை. ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் இருக்கிற விஷயம்தான். அது தமிழ் மொழியில் இருக்கிறது. அது ஆன்மிகத் தமிழாக இருக்கிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவனடியார்களும் பாடல்கள் மூலமாகவும் பாமாலைகள் மூலமாகவும் ஆன்மிகத்தைத் தமிழ்மொழி மூலம் வளர்த்தார்கள். ஆகவே, ரஜினி சொல்கிற விஷயம் புதுதில்லை. அவர் இன்னும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கவில்லை. முதலில் குதிக்கட்டும். மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து அரசியல் நடத்தட்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதேபோலதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் பா.ஜ.க இருப்பதாக ஒரு கும்பல் சொல்லிக்கொண்டுத் திரிகிறது. அதில் கொஞ்சமும் உண்மை இல்லை" என்ற தனது காட்டமான கருத்துகளை வழக்கம்போலவே சிரித்தமுகத்துடன் சொன்னார் தமிழிசை.

இத்தனைக்கும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததுமே, முதல் நபராக, முதல் தலைவராக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னவர் தமிழிசை. அப்படிப்பட்டவர், இன்றைக்கு ரஜினிக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க என்ன காரணம். "ரஜினி தனது சின்னமாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை நீக்கியிருப்பதுதான் காரணம்" என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். "ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் மோடியும்  அமித்ஷாவும் இருக்கிறார்கள் என்று தமிழக பி.ஜே.பி-யினரே பரப்பிவருகிறார்கள். அது உண்மையோ இல்லையோ. விஷயம் அதுவல்ல. என்னமோ ரஜினிக்கு அரசியல் தெரியாது என்பது போலவும் பி.ஜே.பி.யினர்தான் கற்றுத் தருகிறார்கள் என்பது போலவும் அவர்கள் பேசி வருவதும் அதற்கு ஆதாரமாக, ரஜினியின் கொடியில் தாமரை இருப்பதையும் பி.ஜே.பி.யினர் சுட்டிக் காட்டினார்கள். இந்தத் தகவலை அறிந்த ரஜினி, தேவையில்லாத சலசலப்புகளுக்கு இடம்கொடுக்காமல் ஆரம்பத்திலேயே அதைக் கிள்ளிவிட்டார்" என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

மேலும் அவர்களே தொடர்ந்து, ``தாமரையை  ரஜினி நீக்கியத் தகவல் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் பயணம் செய்த தமிழிசையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது சின்னத்தில் ரஜினி மாறுதல் செய்வது அவரது விருப்பம் என்றாலும் இந்தச் செயல் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பாதிக்கும் என்பதால், ரஜினியை எதிர்ப்பதுபோல் பேட்டி அளித்து, ஒரு தற்காப்பு ஆட்டத்தை ஆரம்பத்திலேயே தமிழிசை ஆடிவிட்டார்" என்கிறார்கள். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!