ஜனவரி 11-ல் அதிரப்போகும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை!

கரும்பு விவசாயிகளுக்கு 2 வருடமாக வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லையென்றால் வரும் 11-ம் தேதி பெரம்பலூரில் சாலைமறியல் போராட்டம் நடந்த முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக்கூட்டம், மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநிலத் துணைச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் வரதராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டியனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.31 கோடியே 93 லட்சத்தை ஆலை நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. இதைக் கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வருகிற 11-ம் தேதி, சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசுகள் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கிட வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கூடாது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்கு மருந்து அடித்து இறந்த விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

மதுரை மாவட்டம் மேலூரில் அண்மையில் தேசிய நெஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் சாலை மறியில் போராட்டம் செய்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைப்போலவே வரும் 11-ம் தேதி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்யப்போவதாகக் கரும்பு விவசாயிகள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!