வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (03/01/2018)

கடைசி தொடர்பு:18:49 (03/01/2018)

‘உள்கட்சித் தேர்தல்’ டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களைக் களையெடுக்க அடுத்த அஸ்திரம்!

கட்சியின் பெயரும், இரட்டை இலைச் சின்னமும் தங்களுக்குக் கிடைத்த நிலையிலும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அடைந்த தோல்வி, அ.தி.மு.க மூத்த நிர்வாகிகளை நிலைகுலைய வைத்துள்ளது. எனவே, கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அடுத்தகட்ட 'மூவ்களுக்கு' அ.தி.மு.க தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்காக, உள்கட்சி தேர்தல் என்ற அஸ்திரத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸூம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸூம் கையில் எடுத்துள்ளனர்.

தினகரன்

சசிகலா குடும்பத்திடமிருந்து கட்சியையும், இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றி, அதற்காக தேர்தல் ஆணையத்தில் மேற்கொண்ட முயற்சியில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் வெற்றிபெற்று விட்டனர். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றுப்போய் விட்டனர். இருந்தாலும், "அ.தி.மு.க-வை யாராலும் வீழ்த்த முடியாது'' என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியில் இப்படிச் சொல்லிக் கொண்டபோதிலும் உள்ளுக்குள் அவர்களுக்கு உதறல் இருந்து கொண்டுதான் உள்ளது. அதனால்தான், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் வேலைபார்த்த தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜன், செந்தமிழன், பெங்களூரூ புகழேந்தி உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்கள்.

இந்தக் களையெடுப்பு நடவடிக்கையைத் தாண்டி, கட்சி வளர்ச்சிப் பணிகளில், கட்சியை ஒழுங்குபடுத்தும் பணிகளில் உடனே ஈடுபட வேண்டியதன் அவசியத்தை ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் இருவரும் புரிந்தே வைத்துள்ளார்கள். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுதான் இப்போது அவர்கள் முன் நிற்கும் முக்கியக் கேள்வி? அதாவது, அ.தி.மு.க-வை வலுவாக்குவது, தொண்டர்களைச் சிதறவிடாமல் தக்கவைத்துக் கொள்வது, கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது என்று கட்சியின் வளர்ச்சி குறித்து மாஸ்டர் பிளான்களையும் ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக, முதல்கட்டமாக அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தவிருக்கிறார்கள். உறுப்பினர் சேர்க்கை முடிந்த கையோடு, உள்கட்சித் தேர்தலை நடத்தி முடித்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. 

இப்போது அ.தி.மு.க-வில் இருக்கும் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள், ஏதாவது ஒருவகையில் மன்னார்குடி குடும்பத்தோடு தொடர்பிலிருக்கிறார்கள். அதை முற்றிலுமாகத் துண்டிக்கும்வகையில் புதிய நிர்வாகிகளைப் போடவேண்டும் என்று திட்டம் வகுத்துள்ளார்கள். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வும் அப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனென்றால், 'பொதுக்குழு உறுப்பினர்களே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வுசெய்ய முடியும்' என்று கடந்த பொதுக்குழுவில் சட்டதிட்ட விதிகளில் மாற்றம் செய்து, அதற்காக தீர்மானம் போட்டுள்ளார்கள். எனவே, கட்சியை முழுவதுமாக தங்கள் கட்டிப்பாட்டில் கொண்டுவரும் வகையில், அனைத்து நிர்வாகிகளையும் தங்கள்பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். உள்கட்சித் தேர்தலை முன்னிலைப்படுத்தி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை முற்றிலுமாகக் களையெடுப்பதே இப்போது அ.தி.மு.க-வின் தலையாயப் பணியாக உள்ளது என ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவருமே கருதுகிறார்கள். 

ஓபிஎஸ் இபிஎஸ்

மேலும், தினகரன் மீது என்னென்ன வழக்குகள் உள்ளன? அவற்றின் தற்போதைய விசாரணை நிலவரம் என்ன என்றும் கணக்கெடுத்துள்ளார்கள். 'தினகரனுக்கு எதிரான அந்நியச் செலாவணி வழக்கு மிகவும் சிக்கலானது; அதிலிருந்து அவர் தப்பவே முடியாது' என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேசிக் கொள்கிறார்கள். தினகரன் மீது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அந்நியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் மத்திய அமலாக்கப் பிரிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, அந்த இரு வழக்குகளையும் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணைக்கு தினகரன் தரப்பில் தடை கோரிய நிலையில், உச்சநீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கு விசாரணையை தினகரன் எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இப்போது அந்த வழக்கு, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் குறுக்கு விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அப்போது தினகரன் தரப்பில், ''விசாரணைக்கு முன்பே அமலாக்கத்துறை கேள்விகளைத் தர வேண்டும்" என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். கேள்விகளைத் தராதநிலையில், குறுக்கு விசாரணைக்குக் கால அவகாசம் கேட்கப்பட்டதையும் நீதிபதி நிராகரித்து விட்டார். 'அமலாக்கத்துறை கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்' என்றும் நீதிபதி அப்போது கண்டிப்புடன் கூறினார். இந்த வழக்கின் விசாரணை இன்னும் மூன்று மாதத்திற்குள் முடிவடையும் என்று அ.தி.மு.க எதிர்பார்க்கிறது. 

அதை மனதில் வைத்துதான் நீலகிரியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இதற்கு முன்பு 'திருமங்கலம் ஃபார்முலா' என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை மிஞ்சி, இப்போது ஆர்.கே.நகர் ஃபார்முலா என்ற ஒன்றைக் கண்டுபிடித்து 'தில்லுமுல்லு' செய்தே தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். அது, ஹவாலா ஃபார்முலா. யாருடைய எண்ணத்திற்கும் எட்டாதது, தினகரன் என்ற நபருக்கு மட்டும் எட்டியது என்று சொன்னால், அவர் எப்படிப்பட்ட கிரிமினலாக இருப்பார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஹவாலா ஃபார்முலா மூலம் வெற்றிபெற்ற ஓர் ஆள், இந்த ஆட்சியை மார்ச் மாதத்திற்குள் கலைப்பேன் என்று சொல்கிறார். நீ இருந்தால்தானே கலைப்பாய்; எங்கிருப்பாய் என்று பார்த்துக்கொள்ளலாம். ஆண்டவன் ஒருவன் இருக்கின்றார். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும், கெட்டது நினைத்தால் கெட்டுத்தான் போவார்கள். யார் கெடுதல் நினைத்தாலும் கெட்டுத்தான் போவார்கள்'' என்றார்.

கட்சியையும், ஆட்சியையும் எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முதல்வரும், துணை முதல்வரும் இப்போதே அடுத்தடுத்த மூவ்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் சட்டமன்றத்தில் தினகரனை எதிர்கொள்வது குறித்தும் முதல்வர் பேசியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்