`இந்தச் சட்டங்கள் கொள்ளையடிக்கவே உதவும்' - அரசுக்கு எதிராகக் கொந்தளித்த தொழிலாளர்கள்

மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டம் திருத்தம் கொண்டுவர இருப்பதை கைவிடக் கோரி, அனைத்து சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

வாகனச் சட்டம் திருத்த எதிர்ப்பு

வளர்ந்து வரும் தொழிலாக இருக்கும் சாலைப் போக்குவரத்து தொழிலில், படித்து வேலை கிடைக்காத மற்றும் படிக்க வசதியற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் வேலை செய்து வருகிறார்கள். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்தத் தொழிலை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்ட திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தச் சட்ட திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே புதிய உத்தரவுகளின் மூலமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயல்வதாகவும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகவே, ஓர் ஓட்டுநர் 8 மணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை இயக்கக் கூடாது. அதை வழியிலேயே நிறுத்திவிட வேண்டும் என்பது போன்ற கடுமையான சட்டத்தை அமல்படுத்த முயல்வதாகத் தெரிவிக்கின்றனர். 

இந்தச் சட்டங்கள், காவல்துறையும் போக்குவரத்துத் துறையும் கொள்ளையடிக்கவே உதவிகரமாக அமையும் என்பதால் தொழிலாளர் சங்கங்களுடன் பேசி பொருத்தமான சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயல வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அத்துடன், கால் டாக்சிகளுக்கு அரசே கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். ஓட்டுநர்களின் வாழ்வாதாரமான லைசென்ஸை அற்பக் காரணங்களுக்காகப் பறிக்கக் கூடாது, மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பாக நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலைப் போக்குவரத்து அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் மரியஜான்ரோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர் முன்னேற்றச் சங்கத் தலைவர் மாரிமுத்து, அரசுப் போக்குவரத்து சி.ஐ.டி.யு சங்க பொதுச் செயலாளரான ஜோதி, ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு மாநில துணைப் பொதுச்செயலாளரான கருமலையான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!