வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (03/01/2018)

கடைசி தொடர்பு:20:40 (03/01/2018)

சினிமாவில்தான் ரஜினியை இயக்க முடியும்; பொதுவாழ்வில் யாரும் இயக்க முடியாது! ஜி.கே.வாசன் தடாலடி

தமிழ் மாநிலக் காங்கிரஸின் திருப்பூர் மாநகர மாணவரணி தலைவர் பிரசாத், கடந்த 31-ம் தேதி இரவு வாகன விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் இன்று அவரது இல்லத்துக்கு இரங்கல் தெரிவிக்க வந்த அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அரசியல் என்பது ரஜினிகாந்த்துக்குப் புதிதல்ல. கடந்த 30 ஆண்டு காலமாகத் தமிழக அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். பல நேரங்களில் அவரது வியூகம் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் அரசியலின் ஆழம் தெரிந்தவர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமாவில் மட்டுமே ரஜினியை இயக்க முடியும். பொதுவாழ்வில் அவரை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது.

1996 காலகட்டத்தில் த.மா.கா-வுடன் ரஜினிக்கு நல்ல நெருக்கம் இருந்தது. அது மூப்பனாரின் காலம். அந்த இடத்தை ஏணி வைத்தாலும் என்னால் எட்ட முடியாது. நான் இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் செயல்பட முயல்கிறேன். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதை அவர்கள் அதிகாரபூர்வமாக மக்களிடத்தில் அறிவிக்க வேண்டும். மக்களும் அதை ஏற்றுக்கொண்டு தேர்தலில் முழு அங்கீகாரம் அளிக்க வேண்டும். 

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இயங்குவதாகப் பலமுறை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால், பல எதிர்க்கட்சிகள் அவரது நடவடிக்கைகளை வரவேற்கவில்லை. எனவே, தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு, தற்சமயம் இதுபோன்ற பணிகளை ஆளுநர் தவிர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து நாங்கள் கூறிவருகிறோம். திருப்பூரைச் சுற்றியுள்ள ஈரோடு, கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் முக்கிய தொழில் நடைபெறும் நகரங்களாக இருப்பதால், திருப்பூரை சிறப்புப் பொருளாதார மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியக் கடனுதவியை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மருத்துவத்துறையின் மகிமை மற்றும் அதன் வளர்ச்சியைக் குறைக்கின்ற வகையில் அந்த மசோதாவின் வடிவம் அமைந்திருக்கிறது. மருத்துவக் குழுக்களோடு முறையாகப் பேசி, சரியான முறையில் மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டியது அத்துறையின் கடமை'' என்றார்.