பழக்கடைக்காரரை அதிர்ச்சியடைய வைத்த மகள், மருமகள்! போலீஸின் 14 நாள் டார்கெட்

நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை 2 வாரத்தில் அதிரடியாக மீட்ட போலீஸ் நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

நகைகளை மீட்ட போலீஸ்

நெல்லை சந்திப்பு பெருமாள் வடக்கு ரதவீதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. மொத்த பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 12-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியை கத்தியைக் காட்டி மிரட்டிய இரு இளைஞர்கள் கழுத்தில் கிடந்த நகைகளையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். மொத்தம் 136 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

இது குறித்து நெல்லை குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினார்கள். பழக்கடை செல்லப்பாவின் வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் அந்தப் பகுதியில் இருந்த கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகள் குறித்து போலீஸார் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட நெல்லை சிந்துபூந்துறையைச் சேர்ந்த மணிகண்ட பூபதி, அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த சுதர்சன், பாளையங்கோட்டை ரஹ்மத்நகரைச் சேர்ந்த விக்னேஷ் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில், இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட அழகுநயினார், அவரது மனைவி சுபிக்‌ஷா, அழகுநயினாரின் நண்பன் லட்சுமிகாந்தன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. 

இது பற்றி பேசிய நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, ’’இந்தக் கொள்ளை குறித்து விசாரித்த தனிப்படையினர் சில நாள்களிலேயே 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பழக்கடை செல்லப்பாவின் தங்கை மகள் சுபிக்‌ஷாவும் அவரது கணவர் அழகுநயினாரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். செல்லப்பாவின் மகளுடன் அழகுநயினாருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அவரும் இதற்கு உதவி இருக்கிறார். ஏற்கெனவே பல வழக்குகளில் தொடர்புடைய லட்சுமி காந்தனின் உதவியுடம் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கிறார்கள். 

மீட்கப்பட்ட நகைகள்

விரைவாக இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து 101 சவரன் நகை, கவரிங் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவையும் கொள்ளையரிடமிருந்து மீட்கப்பட்டது. விரைவாகச் செயல்பட்ட தனிப்படை போலீஸாருக்குப் பணப்பரிசுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்ளை தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!