வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (03/01/2018)

கடைசி தொடர்பு:23:30 (03/01/2018)

வைகையின் தற்போதைய நிலை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டருக்கு உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரமேஷ் என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "வைகை ஆறு அரசின் பராமரிப்புக் குறைவால்  பயன்படுத்த இயலாத அளவு மாசடைந்து காணப்படுகிறது. வைகை ஆற்றின் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை பாய்ந்து தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து வந்தது. சுமார் 257 கிலோ மீட்டர் பயணித்து ராமநாதபுரத்தை அடையும் நிலையில் 452க்கும் அதிகமான பகுதிகளில் கழிவு நீர் வைகை ஆற்றில் கலக்கிறது. வைகை ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதுடன் அதிகளவில் குப்பைகளும், கழிவு நீரும் கலக்கின்றன.

எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.  வைகை ஆறு மாசடைவதைத் தடுக்க நிரந்தரக் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும். வைகை ஆற்றை மாசுபடுத்துபவர்கள் மீதும் அங்கு மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றை தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும். குப்பைக் கழிவுகளைக் கொட்டுவோருக்குக் கடும் தண்டனைகள் வழங்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் " எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 32 லட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்து 60 ஆயிரத்து 400 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.