வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:21:13 (03/01/2018)

பொங்கலுக்கு 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்..! எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சென்னையில் வேலை புரிவதால், பண்டிகைக் காலங்களில் அனைவரும் சொந்த ஊருக்குச் செல்வார்கள். அதனால், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த ஆண்டு பொங்கலுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'பொங்கல் பண்டிகைக்காக 11, 12, 13-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 11,983 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் 9-ம் தேதி முதல் செயல்படும். கோயம்பேடு, அண்ணாநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட ஐந்து முனையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு 6 லட்சம் பேர் வரை பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கட்டணங்களில் டிக்கெட் விற்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.