வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (03/01/2018)

கடைசி தொடர்பு:20:01 (03/01/2018)

‘ஆன்மிக அரசியல்’ ரஜினிகாந்துக்கு... ஓர் அன்பு ரசிகையின் கடிதம்!

ரஜினி

ணக்கம் தலைவரே, 

தமிழக மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த உங்களின் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டீர்கள். வாழ்த்துகள். 'என் அரசியல் ஆன்மிக அரசியலாக இருக்கும்' என்றும் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டீர்கள். 

வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும், கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றைப் பற்றி போகப் போக கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். 

சமீப காலமாக, இங்கு நடக்கும் அரசியல் நாடகங்களை நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அதனால்தான், இப்படி முடிவை எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நான் உங்கள் ரசிகை. உங்களை ஒரு கலைஞனாக, எண்ணற்ற கதாபாத்திரங்களில் ரசித்திருக்கிறேன். ஓர் அண்ணணாக, வில்லனாக, காதலனாக, கணவனாக, தந்தையாக, தலைவனாகப் பல வேடங்களில், மிகப்பெரிய ஆளுமையாகவே பார்த்து வியந்தவள் நான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னால், தமிழகத்தில் தலைவன் என்ற பொறுப்பில் யாரும் ‘பொறுப்பாக’ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு பெண்ணாக, அந்த வெறுமையை நான் எப்போதோ உணர்ந்துவிட்டேன். 

தண்ணீர் பற்றாக்குறை முதல் பாலியல் வன்கொடுமை வரை, பெண்களின் பல பிரச்னைகள் இங்கே தீர்வு காணமுடியாதபடி இருக்கின்றன. குறைந்தபட்சம், அதற்கான விவாதங்களையும் எந்த அரசியல் தலைவர்களும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை. நீங்கள் ஒரு தலைவனாக முடிவெடுத்த பின்னர், எங்களுடைய சில தலையாய பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்பீர்கள் என்று எண்ணி, இதை எழுதுகிறேன். 

*தண்ணீர் பிரச்னை தமிழகத்தின் பிரச்னை அல்ல; தமிழகப் பெண்களுக்கு இருக்கும் பிரச்னை. வெயில் காலத்தில், எந்நேரமும் குடத்தை தூக்கிக்கொண்டு, எப்போதும் தண்ணீர் லாரி வரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது நாங்கள்தான். நீங்கள் நடிகனாக இருந்தபோது, காவிரி பிரச்னைக்கும் கிருஷ்ணா நதி பிரச்னைக்கும் என்ன செய்தீர்கள் என்று உங்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனாக பெரிதாக ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை நான் அறிவேன். இப்போது, ஒரு தலைவனாக அதற்குத் தீர்வு காணும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். 

*நீங்கள் ஆன்மிக அரசியலுக்கு, 'நேர்மையான அறவழியிலான சாதி, மதச்சார்பற்ற அரசியல்தான் ஆன்மிக அரசியல்' என்று விளக்கம் அளித்திருந்தீர்கள். பல தலைவர்கள் இதுபோன்ற நிலைப்பாட்டை பேச்சளவிலும், அரசியல் ஆதாயத்துக்காகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். ஒரு பெண் தன் சாதியையோ, மதத்தையோ மீறி திருமணம் செய்து எளிதாக வாழ்ந்துவிட முடியாது. நீங்கள் 'சாதி, மதச் சார்பற்ற' என்று கூறுவது பெண்களுக்கான சுதந்திரச் சொல்லாக மாற வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் கட்சியில், சுயமரியாதை திருமணங்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் அளிக்கும் விதமாக ஒரு திட்டத்தை அறிவிப்பீர்கள் என்றும் நம்புகிறேன். அப்போதுதான் கெளசல்யாக்களும் திவ்யாக்களும் உருவாகாமல் இருப்பார்கள். 

*சமீபத்தில், பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாகச் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது என்று ஒரு செய்தி வெளியாகியது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த வாரம்கூட, ஈ.சி.ஆர் சாலையில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். பாலியல் வன்முறையும், பாலியல் துன்புறுத்தல்களையும் நாங்கள் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு எதிராகக் கடுமையான சட்டம் உருவாக்கும் வகையில், கடுமையான திட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். 

*'அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே' என்று தாயைப் போற்றி பாடியவர் நீங்கள். ஆனால், இங்கு தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் போதிய சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. அதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பெண்களுக்குப் பிரசவ வலியைவிடவும், அரசு மருத்துவமனைகள் அளிக்கும் அலைச்சலின் வலிதான் அதிகமாக இருக்கும். தமிழக தாய்மார்களுக்குச் சுகாதாரமான சூழ்நிலையைத் தருவதற்கான திட்டங்கள் அவசியம் தேவை. 

ஒரு கலைஞனாக, நீங்கள் நடித்த படங்களில், பெண்களுக்கு எதிரான வசனங்களைப் பேசவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு தலைவனாக, பெண்களுக்கு ஒரு முற்போக்கான சமூகத்தை உருவாகுவது உங்கள் கடமை. செய்வீர்கள் என்று நம்புகிறேன். 

இப்படிக்கு, 

உங்கள் ரசிகை


டிரெண்டிங் @ விகடன்