வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (03/01/2018)

கடைசி தொடர்பு:11:51 (04/01/2018)

நேர்முகத்தேர்வில் வேலைவாய்ப்பை இழக்கச்செய்யும் 5 முக்கியத் தவறுகள்!

நாம் என்னதான் திறமைமிக்கவராக இருந்தாலும் வாழ்க்கையை வடிவமைக்கக்கூடிய நேர்முகத்தேர்வில் கோட்டைவிட்டுவிட்டால், ஆயுளுக்கும் அதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருப்போம். ஐ.ஏ.எஸ் தேர்வுகளைக்கூட சிலர் நல்ல முறையில் எழுதியிருப்பார்கள். ஆனால், நேர்முகத்தேர்வில் சரியாகப் பதில் சொல்ல முடியாமல் தோல்வியைச் சந்தித்திருப்பார்கள். இன்டர்வியூ அறை என்பது, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடம் என்பதை மறந்துவிடக் கூடாது. அங்கே என்ன நடக்கும் எனக் கணித்துவிட்டுப் போக முடியாது. அனுபவம், திறமை, பணித்திறன் எல்லாவற்றையும் தாண்டி, இன்டர்வியூ நடத்துபவர்களின் மன ஓட்டத்தை அறிந்து பதிலளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இன்டர்வியூவின்போது நாம் செய்யும் ஐந்து முக்கியத் தவறுகளால் வேலைவாய்ப்பைத் தவறவிடுகிறோம் என்கிறார்கள் வல்லுநர்கள். 

நேர்முகத்தேர்வு -  வேலை

நல்ல உடை, பாலீஷ் போடப்பட்ட காலணி, தோற்றம் எல்லாவற்றையும் தாண்டி இன்டர்வியூ நடத்துபவரை நேருக்குநேர் பார்த்துப் பேச வேண்டும். கண்களைத் தவிர்க்கும்பட்சத்தில் நம்பிக்கையற்றவர்களாக நம்மைக் கருத ஆரம்பித்துவிடுவார்கள். இன்டர்வியூவுக்குச் செல்லும் 70 சதவிகிதம் பேர், கண்களைப் பார்த்துப் பேசாததன் காரணமாக ரிஜெக்ட் செய்யப்பட்டு, வேலைவாய்பை இழக்கிறார்கள். எனவே, இன்டர்வியூவின்போது கண்களைப் பார்த்துப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். 

இன்டர்வியூ நடைபெறும்போது, பழைய நிறுவனங்களைப் பற்றித் தவறாக எதுவும் பேசக் கூடாது. பழைய நிறுவனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு இன்டர்வியூ நடத்துபவர்கள் வேண்டுமென்றே உங்களிடம் ஏதாவது தவறாகக்கூடக் கேட்கலாம். அப்போது, அதற்கு உங்களின் பதில் ஜென்டிலாக இருக்க வேண்டுமே தவிர, குறை கூறும்விதத்தில் இருக்கக் கூடாது. பணிபுரிந்த இடங்களில் உங்கள் மூத்த அதிகாரி பற்றியோ, சக ஊழியர்களைப் பற்றியோ குறை கூறாமல் இருப்பது நல்லது. பழைய நிறுவனத்தைக் குறை கூறும்விதத்தில் நீங்கள் பதில் அளிப்பதால், இன்டர்வியூ நடத்துபவர்களுக்கு உங்கள்மீது தவறான கண்ணோட்டம் எழ வாய்ப்பிருக்கிறது. உங்கள் மதிப்பு இந்த இடத்தில்தான் முக்கியமாகக் கணிக்கப்படுகிறது.

பணியைப் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். செய்யவேண்டிய பணிகளைப் பற்றி இன்டர்வியூ நடத்துபவர்களிடம் கேள்விகள் எழுப்புவது, பணியில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும். பணி பற்றி கேள்வி எழுப்பாமல் இருந்தால், ஆர்வம்குறைவு என முடிவெடுத்துவிடுவர். அதனால், வேலையைப் பற்றி இன்டர்வியூ நடத்துபவர்களிடம் சில கேள்விகளை முன்வைப்பது நல்லது. நமது திறமைகள் குறித்து அதிகம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நமக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் அதிகமிருக்கிறதோ அது குறித்துப் பேசுவது நல்லது. 

இன்டர்வியூவின்போது பொய் சொல்வதையோ அல்லது உங்கள் பணிவாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களையோ சொல்வதைத் தவிர்க்கவும். இன்டர்வியூ நடத்துபவர்கள் அவற்றைக் கேட்க விரும்புவதில்லை. கண்ணியமும் நேர்மையும்தான் உங்களுக்கு வேலையைப் பெற்றுத் தருவதில் முதல் இடத்தில் உள்ளன என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.

இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகளை நன்கு கவனிக்கவேண்டும். தகவல்களைத் திறம்பட பரிமாறிக்கொள்ளும் திறமைகொண்டவர்களால் மட்டுமே அடுத்தவர்களை சிறந்த முறையில் கவனிக்க முடியும். எனவே, `இன்னொரு முறை சொல்லுங்கள்' என்று கூறுவதைத் தவிர்க்கவும். கேள்விகளைக் கூர்ந்து கவனிப்பது, நம்மை நல்லமுறையில் பதில் சொல்லவைக்கும். கேள்விக்குத் தகுந்த பதிலை மட்டும் அளியுங்கள். பணிக்குச் செல்லும் முன், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு செல்வது  பயனளிக்கும். 

நேர்முகத்தேர்வின்போது,  இந்த ஐந்து விஷயங்களையும் கவனத்தில்கொண்டால் வெற்றி நிச்சயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்