`கருணாநிதியிடம் ஆசி பெற்றேன்!' - கோபாலபுரத்தில் ரஜினி

சென்னை கோபாலபுரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். 

சென்னையில், ரசிகர்கள் மத்தியில் டிசம்பர் மாதம் 31-ம் தேதி பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசம், தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் பிரவேசத்துக்கான பணிகளில் தீவிரம் காட்டிவரும் ரஜினி, அதற்காக ரசிகர்களை ஒன்றிணைக்க புதிய இணையதளம் ஒன்றையும், செல்போன் செயலி ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

மேலும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, ஆன்மிக அரசியல்குறித்து விளக்கமளித்த ரஜினி, ‘உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி, மதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல். அறவழி அரசியலே ஆன்மிக அரசியல். எனது கட்சியின் சின்னம், பெயர் போன்றவை குறித்துப் போகப் போகத் தெரியும்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை, ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார். கோபாலபுர இல்லத்தில் இருக்கும் கருணாநிதியை ரஜினி சந்திக்கச் சென்றபோது, ஸ்டாலின் அவரை கைகொடுத்து வரவேற்று, வீட்டிற்கு உள்ளே அழைத்துச் சென்றார். 

முன்னர், `மரியாதை நிமித்தமாகவே தி.மு.க-வின் தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறேன். கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு, அவருக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கலாம் என்பதற்காகவே அவரைச் சந்திக்கிறேன்' என்று போயஸ் கார்டனில் இருக்கும் தனது இல்லத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த். 

 

சந்திப்புக்குப் பின்னர் பேசிய ரஜினிகாந்த், `கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறினேன். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கூறினேன். பின்னர், அவரிடம் ஆசி பெற்றேன்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!