`ரஜினியை தி.மு.க ஆதரிக்குமா?' - மு.க.ஸ்டாலின் பதில்

சென்னைக் கோபாலபுரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இது குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துக் கூறினார். 

சந்திப்புக்குப் பின்னர் பேசிய ரஜினிகாந்த், `கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறினேன். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கூறினேன். பின்னர், அவரிடம் ஆசி பெற்றேன்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார். 

ரஜினி சென்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும்...

"நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்ததற்கு கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கியதாக அவர் சொல்லி இருக்கிறாரே?"

"தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க வேண்டும். அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார். ஏற்கனவே, நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த், தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். எனவே, இந்த சந்திப்பானது புதிதல்ல. ஆகவே, இதுவொரு அதிசயப்பட வேண்டிய, ஆச்சரியப்பட வேண்டிய ஒரு செய்தியல்ல.

எனவே, இங்கு வருகிறேன் என்று அவர் சொன்னார். வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்பது தமிழர் பண்பாடு. அதனால் அவரை நாங்கள் இன்முகத்தோடு வரவேற்றோம். அவரும், தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல, என்னுடைய தாயார் தயாளு அம்மாள் அவர்களையும் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

ஆனால், அரசியல் பிரவேசத்திற்கு ஆசிர்வாதம் வாங்கினேன் என்று அவரே உங்களிடத்தில் தெரிவித்ததாக, நீங்கள் இப்போது சொல்கிறீர்கள். இதேபோல, நடிகர் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்கியபோதும் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். எனவே, அரசியல் பண்பாடு மற்றும் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்களும் அவரை இன்முகத்தோடு வாழ்த்தி இருக்கலாம். அதையே நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் சொல்லியிருப்பதாக நான் கருதுகிறேன்."

"நடிகர் ரஜினிகாந்த் ஆசி மட்டும் கேட்கிறாரா அல்லது திமுகவின் ஆதரவையும் கேட்கிறாரா?"

"அப்படி அவர் கேட்பதானால், அதை ஏற்பதா இல்லையா என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், ஆன்மிக அரசியலை நடத்தப் போவதாக அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள திராவிட இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால்  ரஜினிகாந்த் கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் தெளிவாக சொல்லிக் கொள்வது, தமிழ்நாட்டின் மண் திராவிட இயக்கத்தின் மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர்  ஆகியோரால் பண்பட்டு இருக்கின்ற மண் இந்த மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ இதற்கு முன் முயற்சித்துப் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதைகள் எல்லாம் நாட்டுக்கே நன்கு தெரியும்."

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!