வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (04/01/2018)

கடைசி தொடர்பு:00:00 (04/01/2018)

கன்னியாகுமரியை தேசியப் பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்கக்கோரி தி.மு.க எம்.எல்.ஏ உண்ணாவிரதப் போராட்டம்..!

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகைகளை உயர்த்தி வழங்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சியில் பத்பநாபபுரம் எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் தலைமையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அரசியல்கட்சித் தலைவர்கள் முதல் பிரதமர் வரை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்து விட்டுப் போன பிறகும் இன்னும் உரிய நிவாரணங்கள், இழப்பீடுகள் முறையாக மக்களுக்கு வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையினை வழங்கிட வேண்டும். பயிர் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுபோல அரசு வேலை உட்பட அனைத்து நல உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும். சாலை, வீடுகள் சீரமைப்பு. கடலில் காணாமல் போன மீனவர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் புலியூர் குறிச்சியில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தை விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். பத்பநாபபுரம் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி வருகிறார். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். போராட்டத்தின்போது திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் மற்றும் போலீஸார் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாததால் எம்.எல்.ஏ.மனோ தங்கராஜ் போராட்ட பந்தலிலேயே படுத்துத் தூங்கினார். இன்று காலையும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். போராட்டத்திற்கு எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன் போன்ற பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இன்று சப்-கலெக்டர் மற்றும் ஏ.எஸ்.பியுடன் நடந்த பேச்சுவார்த்தைய்ம் தோல்வியில் முடிந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க