காரைக்குடியில் ரேஷன் கடை மாற்றம்..! பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்

காரைக்குடியில் ரேஷன் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். 

காரைக்குடி நகராட்சியில் 22-வது வார்டு, 12-வது வார்டு பகுதிக்கான பாம்கோ ரேஷன் கடை, வ.உ.சி. சாலையில் உள்ளது. இக்கடை 32-வது ஆண்டாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு இரண்டு வார்டையும் சேர்ந்த 1,200 குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவோடு இரவாக எவ்வித முன்னறிவிப்பின்றி 11-வது வார்டில் உள்ள ரேஷன் கடையை முத்துப்பட்டணம் 2-வது வீதியில் உள்ள வாடகைக் கட்டடத்துக்கு மாற்றியுள்ளனர். நேற்று காலையில் வழக்கம்போல் கடைக்குச் சென்ற அப்பகுதி மக்கள் கடை மாற்றப்பட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர். 

பின்னர், முன்னாள் கவுன்சிலர்கள் சி.மெய்யர், ராஜேந்திரன் தலைமையில் அப்பகுதிப் பெண்கள், அறிவிப்பின்றி கடை மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் மகேஷ்வரன் பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அறிவிப்பின்றி மாற்றம் செய்த கடையை மீண்டும் பழைய இடத்தில் செயல்படுத்தவும், சரியான எடையில் பொருள்கள் வழங்காத பணியாளர்கள் 3 பேரை வேறு கடைக்கு மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்தனர். குறிப்பிட்ட  காலஅவகாசத்தில் பழைய பகுதிக்குக் கடை கொண்டு வரப்படும் என உறுதி அளித்ததால் கலைந்துசென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!