வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:23:46 (03/01/2018)

"மத்திய அரசின் திட்டங்களில் முரண்பாடுகள்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மத்திய அரசின் திட்டங்களில் முரண்பாடுகள் இருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

வேலுமணி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயப் பிரச்னை, குடிநீர் பிரச்னை, புயல் என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாகக் கையாண்டுள்ளது. இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் வழக்கமான கூட்டம்தான். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டி.டி.வி தினகரன் சட்டமன்றத்திற்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் கட்சிக் கொள்ளைகளை அறிவித்த பின்னர் அதுகுறித்து பார்க்கலாம். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்றத் திட்டங்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலைதான் இருக்கிறது. அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்ப காலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டமும், அவினாசி சாலை பாலம் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும்" என்றார்.